கிடாவெட்டு பூஜைகள் களை கட்டியது
கறம்பக்குடி பகுதியில் குலதெய்வ வழிபாட்டிற்கான கிடா வெட்டு பூஜைகள் களை கட்டி உள்ளது. விடிய விடிய நடக்கும் கிடா விருந்தால் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
குலதெய்வ வழிபாடு
தமிழர்களின் கலாசாரம் மற்றும் வாழ்வியலில் குலதெய்வ வழிபாடு முக்கியமானது ஆகும். ஒவ்வொரு பங்காளி உறவு முறை உள்ளவர்களுக்கும் ஒரு குலதெய்வம் இருக்கும். வீட்டில் நடைபெறும் அனைத்து நற்காரியங்களும் குலதெய்வ வழிபாட்டிற்கு பின்னரே தொடங்கப்படுவது வழக்கம். பணி மற்றும் தொழில் நிமித்தமாக வெளியூர்களில் வசிப்பவர்கள் கூட குலதெய்வ வழிபாட்டிற்காக சொந்த ஊர் வந்து செல்ல தவறுவது இல்லை. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் குடியுரிமை பெற்று வசிப்பவர்கள் கூட அவ்வப்போது குலதெய்வ கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தி செல்வர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் ஆடி 18-ல் தொடங்கி ஆவணி மாதம் வரை கிராம தெய்வங்களுக்கான குலதெய்வ வழிபாட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். சங்கிலி கருப்பர், பட்டவர், மாயாண்டி, அய்யனார், மாட காளி, காப்பு முனி, பெருமாளப்பன், மயிலப்பசாமி, நொண்டி அப்புச்சி, மாய கருப்பர், தொட்டாச்சி அம்மன், கொம்புக்காரன், வேட்டுவர், உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராம தெய்வங்களின் கோவில்கள் கறம்பக்குடி பகுதியில் உள்ளன.
கறி விருந்து
தினமும் 5, 6 கோவில்களில் நடைபெறும் கிடாவெட்டு பூஜைகளால் கறம்பக்குடி பகுதி களை கட்டி உள்ளது. தினந்தோறும் நடக்கும் கறி விருந்தால் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கிடாவெட்டு பூஜைக்காக ஆண்டுதோறும் புதிய அரிவாள்கள் தயார் செய்யப்படுகிறது. இவற்றை கொல்லுபட்டறைகளில் இருந்து கோவில் பூஜாரிகள் தாரை தப்பட்டைகள் முழங்க ஊர்வலமாக எடுத்து செல்கின்றனர். நல்ல மழை பெய்ய வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும், நோய் பிணி இன்றி குடும்பத்தில் செல்வம் செழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கிராம தெய்வங்களுக்கு கிடா வெட்டு பூஜைகள் நடத்தப்படுகின்றன. கறம்பக்குடி பகுதியில் நடைபெறும் பூஜைகளில் தினமும் 500 ஆடுகளுக்கு மேல் பலியிடப்படுகின்றன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூஜைகளில் கலந்து கொள்கின்றனர்.
விடிய விடிய கறி விருந்து
சில கோவில்களில் இரவு நேரத்தில் கிடா வெட்டு பூஜைகள் நடத்தப்படுகிறது. காப்பு முனி, ஆகாச வீரப்பய்யா, மாயவர் போன்ற வனப்பகுதிகளில் உள்ள கோவில்களின் பூஜைகளில் பெண்கள் பங்கேற்பது இல்லை. ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த இரவு பூஜையில் விடிய விடிய கறி விருந்து பரிமாறப்படுகிறது. இங்கு வைக்கப்படும் கறி ரசம் பிரசித்தி பெற்றது. இந்த பூஜைகளில் இளைஞர்கள் அதிக அளவில் கலந்து கொள்கின்றனர்.
களம் இறங்கிய பூஜா சோறு குழு
40 நாட்களுக்கு மேல் நடைபெறும் கிடா வெட்டு பூஜை அன்னதான நிகழ்வில் பங்கேற்க முடியாத முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஏழை எளியவர்கள் பயன்பெறும் வகையில் கறம்பக்குடி பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பூஜா சோறு சமூக வலைதள குழு உருவாக்கப்பட்டது. இந்த குழுவில் உள்ள இளைஞர்கள் பூஜை நடைபெறும் கிராமங்கள், கோவில்கள் குறித்த தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பூஜைகளில் பங்கேற்று உணவுகளை வாங்கி இயலாதவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
வெள்ளாட்டு கிடாய் விலை கிடுகிடு உயர்வு
கிடா வெட்டு பூஜைக்கு வெள்ளாடுகள் மட்டுமே பயன்படுத்த படும். கிராம பகுதிகளில் உள்ள சிலர் பூஜைக்காக வெள்ளாடுகளை வளர்ப்பர். பலர் சந்தைகளில் ஆடுகளை வாங்கியே பூஜைக்கு பயன்படுத்துகின்றனர். இதனால் வெள்ளாட்டு கிடாய் விலைகள் கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. அதிலும் மச்சம் இல்லாத கிடாய்க்கு (முழுவதும் கருப்பு நிறத்தில் உள்ளவை) கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. வெட்டன் விடுதி, திருவோணம் சந்தைகளில் 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்கப்பட்டது. இதனால் ஆடு வளர்ப்போர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.