களை கட்டிய கிடாய் முட்டு போட்டி

தேவகோட்டை அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு கிடாய் முட்டு சண்டை போட்டி நடைபெற்றது. இதை திரளான பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர்.

Update: 2023-05-29 18:45 GMT

தேவகோட்டை

தேவகோட்டை அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு கிடாய் முட்டு சண்டை போட்டி நடைபெற்றது. இதை திரளான பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர்.

கிடாய் முட்டு போட்டி

தேவகோட்டை அருகே திட்டுக்கோட்டை உறுதிகோட்டை கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் உற்சவ திருவிழாவை முன்னிட்டு கிடாய் முட்டு சண்டை போட்டி நடைபெற்றது. இந்த கிடாய் முட்டு சண்டைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மதுரை ஐகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் பல்வேறு நிபந்தனைகளுடன் இந்த கிடாய் முட்டு சண்டைக்கு அனுமதி வழங்கப்பட்டது

இந்த போட்டிக்காக சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 30 ஜோடி கிடாய்கள் பங்கேற்றன.

பரிசு

போட்டி நடைபெறும் திடல் நடுவில் 2 கிடாய்கள் ஒன்றோடு ஒன்று 60 முறை முட்ட வேண்டும். அதில் எந்த கிடாய் முட்டாமல் திடலை விட்டு வெளியே செல்கிறதோ அந்த கிடாய் தோல்வி பெற்றதாக அறிவிக்கப்படும். போட்டியில் வெற்றி பெற்ற கிடாய்க்கு கேடயம் மற்றும் பதக்கம் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் 2 கிடாய்க்களும் 60 முறை மோதிக்கொண்டால் இருவருக்கும் சமமாக பரிசுகள் அறிவிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் போட்டி தொடங்கியது.

களத்தில் நின்ற கிடாய்கள் ஒன்றுக்கொன்று பலமாக மோதி கொண்டன. அதை கிடாய் உரிமையாளர்கள் சத்தம் போட்டு தங்கள் கிடாய்களை உற்சாகப்படுத்தினார்கள். இந்த போட்டியை திரண்டிருந்த பார்வையாளர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

இதில் வெற்றி பெற்ற கிடாயின் உரிமையாளர்களுக்கு பீரோ, அண்டா, பதக்கம், கேடயம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்