பிரதமரின் உதவித்தொகை பெற இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யாத 14,621 விவசாயிகள்

தேனி மாவட்டத்தில் பிரதமரின் உதவித்தொகை பெற இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யாமல் 14 ஆயிரத்து 621 விவசாயிகள் உள்ளனர்.

Update: 2022-11-30 17:15 GMT

தமிழகத்தில் பிரதமரின் கிஷான் சம்மான் நிதி திட்டம் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்களுக்கு உதவித்தொகையாக 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக மத்திய அரசால் செலுத்தப்படுகிறது.

நடப்பாண்டில் 13-வது தவணையாக, அதாவது 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையுள்ள காலத்துக்கான தவணை தொகையை பெறுவதற்கு பிரதமரின் கிஷான் இணையதளத்தில் விவசாயிகள் தங்களின் ஆதார் எண்ணை உறுதி செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு உறுதி செய்தவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 33 ஆயிரத்து 361 விவசாயிகள் பயன்பெறுகின்றனர். அவர்களில் 18 ஆயிரத்து 740 பேர் தங்களின் ஆதார் எண்ணை இணையதளத்தில் உறுதி செய்துள்ளனர். 14 ஆயிரத்து 621 பயனாளிகள் இன்னும் ஆதார் எண்ணை உறுதி செய்யாமல் உள்ளனர். பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களின் செல்போன் மூலமாகவோ ஆதார் எண்ணை இணையதளத்தில் உறுதி செய்யலாம்.

இதுவரை ஆதார் எண்ணை உறுதி செய்யாத விவசாயிகள் தாமதமின்றி சம்பந்தப்பட்ட இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை அல்லது தோட்டக்கலை துறை அலுவலகத்தை விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை தேனி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) தனலட்சுமி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்