பாறையில் இருந்து தவறி விழுந்த யானை பலி

கூடலூர் அருகே 15 வயது பெண் காட்டு யானை பாறையில் இருந்து தவறி கீழே விழுந்து பலியானது. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-06-27 14:25 GMT

கூடலூர், 

கூடலூர் அருகே 15 வயது பெண் காட்டு யானை பாறையில் இருந்து தவறி கீழே விழுந்து பலியானது. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காட்டு யானை பலி

கூடலூர் வனப்பகுதியில் காட்டு யானை, சிறுத்தை, புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்தநிலையில் ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட தெய்வமலை வனப்பகுதியில் காட்டு யானை இறந்து கிடப்பதாக தோட்ட தொழிலாளர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து ஓவேலி உதவி வன பாதுகாவலர் சீனிவாசன் தலைமையிலான வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது சுமார் 15 வயதான பெண் காட்டு யானை இறந்து கிடந்ததை பார்த்தனர். யானை இறந்ததற்கான காரணம் தெரியவில்லை. இதைத்தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.

ஆய்வகத்துக்கு அனுப்பி வைப்பு

பின்னர் காட்டு யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது யானையின் உடலில் பல இடங்களில் உள் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக ஆய்வு செய்த போது உணவுக்காக காட்டு யானை இடம்பெயர்ந்து சென்ற போது, பாறையில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் என உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் மருத்துவ குழுவினர் காட்டு யானையின் முக்கிய உடற்பாகங்களை சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கால்நடை டாக்டர் ராஜேஷ் குமார் கூறியதாவது:-

காட்டு யானை தவறி விழுந்து பலத்த அடிபட்டு உயிரிழந்ததற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது. இதனால் முக்கிய உடற்பாகங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதன் அறிக்கை கிடைத்த பின்னரே முழு விபரம் தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து ஓவேலி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்