கிராம நிர்வாக அதிகாரி படுகொலை: மேலும் ஒருவர் கைது

கிராம நிர்வாக அதிகாரி படுகொலை வழக்கில் குற்றவாளியை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது.

Update: 2023-04-26 06:29 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (வயது 55). இவர் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இவர் தினமும் சூசைபாண்டியாபுரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் அலுவலகத்துக்கு சென்று வந்தார். நேற்றும் அவர் வழக்கம் போல் அலுவலகத்துக்கு வந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.

மதியம் 12 மணியளவில் அவர் பணியில் இருந்தபோது 2 மர்மநபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிசை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். உடனே அவர் தப்பி ஓட முயன்றார். ஆனாலும் அவரை சுற்றி வளைத்து வெட்டினர். பின்னர் அங்கிருந்து வெளியே ஓடி வந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். கண் இமைக்கும் நேரத்தில் இந்த வெறியாட்டத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், துணை சூப்பிரண்டு (பொறுப்பு) சத்யராஜ், முறப்பநாடு இன்ஸ்பெக்டர் ஜமால், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசாரணையில், தாமிரபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்ட விவகாரத்தில் லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரியவந்து உள்ளது. அதாவது, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முறப்பநாடு தாமிரபரணி ஆற்று பகுதியில் லூர்து பிரான்சிஸ் ரோந்து சென்றபோது சிலர் மணலை அள்ளி இருசக்கர வாகனத்தில் ஏற்றியதை கண்டித்ததுடன் அவர்கள் மீது முறப்பநாடு போலீசில் புகார் அளித்து இருக்கிறார். இந்த முன்விரோதத்தில் அவரை மர்மநபர்கள் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதற்கிடையே, அகரம் பகுதியில் ஒரு நபர் அரிவாளுடன் செல்வதாக முறப்பநாடு புறக்காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அந்த நபரை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கலியாவூரை சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்பதும், லூர்து பிரான்சிஸ் கொலையில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமசுப்பிரமணியனை கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள மாரிமுத்து என்பவரை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடி வந்த நிலையில், தலைமறைவாக இருந்த மாரிமுத்துவை நெல்லை மாவட்டம் தாழையுத்து அருகே தனிப்படை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், முறப்பநாடு, வல்லநாடு, கலியாவூர், அகரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்