கில்லா சீனிவாச பெருமாள் கோவில் புதிய மரத்தேர் வெள்ளோட்டம்

ஆரணியில் கில்லா சீனிவாச பெருமாள் கோவில் புதிய மரத்தேர் வெள்ளோட்டத்தை தி.மு.க., அ.தி.மு.க.வினர் போட்டி போட்டு வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

Update: 2022-09-12 17:59 GMT

ஆரணி

ஆரணியில் கில்லா சீனிவாச பெருமாள் கோவில் புதிய மரத்தேர் வெள்ளோட்டத்தை தி.மு.க., அ.தி.மு.க.வினர் போட்டி போட்டு வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

புதிய மரத்தேர் வெள்ளோட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையம் பகுதியில் உள்ள அலர்மேலுமங்கை சமேத கில்லா சீனிவாச பெருமாள் கோவிலில் பெரிய மரத்தேர் இருந்தது. இந்த தேர் காலப்போக்கில் சிதிலம் ஏற்பட்டு தேர் இல்லாத நிலை இருந்தது.

இந்த நிலையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது அப்போதைய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ரூ.28 லட்சம் மதிப்பில் புதிய மரத்தேர் உருவாக்க உத்தரவிட்டு நிதியும் ஒதுக்கீடு செய்தார்.

ஒதுக்கப்பட்ட நிதி குறைவாக இருந்ததால், மீதமுள்ள தொகையினை பொதுமக்கள் நிதி பங்களிப்புடன் புதிய மர தேர் வடிவமைத்து வெள்ளோட்டத்துக்கு தயார் நிலையில் இருந்தது.

இதுசம்பந்தமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர் வெள்ளோட்டம் நடைபெறுமா? என தினத்தந்தியில் செய்தி வெளியானது. இதையடுத்து உடனடியாக துறை அதிகாரிகள் ஆய்வு செய்து 12-ந் தேதி தேர் வெள்ளோட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.

தி.மு.க.வினர்

அதன்படி இன்று தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. விழாவுக்கு கோவில் செயல் அலுவலர் ம.சிவாஜி, ஆய்வாளர் நடராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், செய்யாறு தொகுதி ஒ.ஜோதி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். முன்னதாக அவர்களுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

அ.தி.மு.க.

சிறிது நேரத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. நிர்வாகிகளுடன் வந்தார். அவருக்கும் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக அ.தி.மு.க. சார்பில் தேர் வெள்ளோட்டம் நடந்தது. சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.

விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. தூசி கே.மோகன், மாவட்ட கவுன்சிலர் கோவிந்தராசன், நகரமன்ற துணைத்தலைவர் பாரி பி.பாபு, மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் வக்கீல் கே.சங்கர், மாவட்ட கூட்டுறவு பண்டக சாலை தலைவர் ஜி.வி.கஜேந்திரன், முன்னாள் கோவில் அறங்காவலர் அசோக்குமார், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் எஸ்.எஸ்.அன்பழகன், வக்கீல் எம்.சுந்தர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தயாநிதி, பாண்டுரங்கன் மற்றும் நிர்வாகிகள், நகரமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், பக்தர்கள், அனைத்து அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்