வாலிபரை கொன்று கை, கால்களை கட்டி அகழியில் உடல் வீச்சு
வேலூரில் வாலிபரை கொன்று கை, கால்களை கட்டி உடலை கோட்டை அகழியில் வீசிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
அழுகிய நிலையில் பிணம்
வேலூர் கோட்டை அகழியில் பெரியார் பூங்கா பகுதியில் சிவப்பு நிற தரை விரிப்பால் சுற்றப்பட்ட நிலையில் பிணம் ஒன்று நேற்று காலை மிதந்து கொண்டிருந்தது. அதில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பிணம் கிடந்த அகழி கரையோரம் ரத்தக்கறைகள் ஆங்காங்கே காணப்பட்டன.
தகவலறிந்த வேலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அகழி தண்ணீரில் இறங்கி பிணத்தை கயிறு கட்டி மேலே கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். பிணம் முட்புதரின் அடிப்பகுதியில் சிக்கியதாலும், அழுகி இருந்ததாலும் மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் பிணத்தை மேலே கொண்டு வந்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
அதனை போலீசார் அவிழ்த்து பார்த்தபோது அதில் 30 வயது மதிக்கத்தக்க கருப்பு நிறத்தில் வெள்ளை கோடு போட்ட சட்டையும், கருப்பு நிற பேண்டும் அணிந்த வாலிபர் உடல் அழுகிய நிலையில் இருந்தது. முகம், கழுத்து பகுதியில் காயங்கள் இருந்தன. கை, கால்கள் அவர் அணிந்திருந்த சட்டையின் ஒரு பகுதியை கிழித்து கட்டப்பட்டிருந்தன. கையில் ஏ.சி.சித்ரா என்று பச்சை குத்தப்பட்டிருந்தது. மேலும் உடலுடன் 4 கருங்கற்களை கட்டியிருந்ததும் தெரிய வந்தது.
இதற்கிடையே போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மற்றும் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு ஆகியோர் அங்கு வந்து வாலிபர் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாய் சாரா அங்கு வரவழைக்கப்பட்டது. அது அகழி கரையோரம் கிடந்த சிவப்பு நிற தரைவிரிப்பின் ஒருபகுதியை மோப்பம் பிடித்து விட்டு கோட்டை பூங்காவை நோக்கி ஓடியது. கைரேகை நிபுணர்கள் ரத்தக்கறை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர்.
அதைத்தொடர்ந்து வாலிபரின் பிணத்தை போலீசார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 நாட்களுக்கு முன்பு கொலை
இந்த கொலை குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், பெரியார் பூங்கா அல்லது பொருட்காட்சி நடக்கும் திடல் பகுதியில் இரவுநேரத்தில் மர்மநபர்கள் மதுஅருந்தும் போது ஏற்பட்ட தகராறில் வாலிபரை அடித்து கொலை செய்து, கை, கால்களை கட்டி அகழி தண்ணீரில் வீசி உள்ளனர். பிணம் அழுகி துர்நாற்றம் வீசுவதால் 2, 3 நாட்களுக்கு முன்பு இந்த கொலை நடந்திருக்க வாய்ப்பு உள்ளது.
வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒருவாரத்தில் காணாமல் போனதாக போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்ட வாலிபர்களின் விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள். அதன்பின்னரே கொலைக்கான முழுமையான காரணம் தெரிய வரும் என்று தெரிவித்தனர்.