பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல்

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தப்பட்டது. இதனால் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். குழந்தையை கண்டுபிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-07-03 14:18 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தப்பட்டது. இதனால் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். குழந்தையை கண்டுபிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

பெண் குழந்தை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்தவர் யூனிஸ்(வயது 28). அதே பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி திவ்யபாரதி(25). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவரை, கடந்த 27-ந் தேதி பிரசவத்துக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் சேர்த்தனர்.

இதையடுத்து 29-ந் தேதி திவ்யபாரதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அங்கு தொடர்ந்து தாய்க்கும், சேய்க்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கடத்தல்

இந்த நிலையில் இன்று அதிகாலையில் திவ்யபாரதி தூங்கி கொண்டு இருந்தபோது, மர்ம ஆசாமிகள் குழந்தையை கடத்தி சென்றுவிட்டனர். தூக்கத்தில் இருந்த எழுந்த அவர், குழந்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் திரண்டு வந்த அவர்கள், ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதை அறிந்ததும், கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தார். தொடர்ந்து குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினார். பின்னர் ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டுவிட்டு, உடனடியாக வால்பாறை, பேரூர் மற்றும் மதுவிலக்கு பிரிவை சேர்ந்த 3 துணை சூப்பிரண்டுகள் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 6 தனிப்படைகளை அமைத்து, விசாரணையை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.

வலைவீச்சு

இதற்கிடையில் குழந்தையை கடத்தி மர்ம ஆசாமிகள் ஆட்டோவில் தப்பி சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து. அதன்பேரில் அந்த பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அத்துடன் பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

அப்போது, குழந்தையை கட்டைப்பையில் வைத்து கடத்தி சென்ற 2 பெண்கள், கோவை உக்கடம் செல்லும் பஸ்சில் ஏறுவது தெரியவந்தது. தொடர்ந்து உக்கடம் பஸ் நிலையத்துக்கு சென்றும் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கோவை மாவட்டம் முழுவதும் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

ரூ.10½ கோடி புதிய கட்டிடத்தில் கண்காணிப்பு கேமரா இல்லை

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டு ரூ.10½ கோடியில் குழந்தைகள் மகப்பேறு நலப்பிரிவு கட்டிடம் புதிதாக அமைக்கப்பட்டது. ஆனால் அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில் எதிரே வணிக வளாகங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஆனாலும் குழந்தையை கடத்தி சென்ற 2 பெண்களின் உருவங்களை அடையாளம் காணுவதில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. குழந்தை விற்பனை செய்வதற்காக கடத்தப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்