கடத்தல் வழக்கு: மதுரை ஐகோர்ட்டில் குருத்திகா ஆஜரானதால் தந்தைக்கு முன்ஜாமீன்

கடத்தல் வழக்கில் மதுரை ஐகோர்ட்டில் குருத்திகா ஆஜரானதால் தந்தைக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது

Update: 2023-06-12 20:29 GMT


தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் என்ஜினீயர் வினீத் மாரியப்பன். இவரும், இதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் குருத்திகாவும் காதலித்தனர். இதற்கு குருத்திகாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நாகர்கோவில் பகுதியில் அவர்கள் இருவரும் வினீத்தின் உறவினர்கள் மத்தியில் திருமணம் செய்தனர். இதற்கிடையே குருத்திகா மாயமாகிவிட்டதாக குற்றாலம் போலீசில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரணைக்காக வினீத்-குருத்திகா ஆகியோர் ஆஜராகிவிட்டு, வினீத்தின் வீட்டுக்கு திரும்பினர். அந்த சமயத்தில் ஒரு கும்பல் வினீத்தை தாக்கிவிட்டு, குருத்திகாவை கடத்திச் சென்றது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்தனர். அதில், குருத்திகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேர்க்கப்பட்டனர். இதனால் அவர்கள் தலைமறைவானார்கள். ஆனாலும் சிலரை போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு குருத்திகாவின் தந்தை நவீன் படேல் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி முன்பு குருத்திகா ஆஜராகி, தன்னை யாரும் கடத்தவில்லை. தனக்கு குஜராத்தில் ஏற்கனவே திருமணம் நடந்துவிட்டது என தெரிவித்தார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, குருத்திகாவின் தந்தை நவீன்படேல், சாட்சிகளை கலைக்கும் நோக்கில் செயல்படக்கூடாது என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளை விதித்து அவருக்கு முன்ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்