தனியார் நிறுவன ஊழியரை கடத்தி ரூ.23 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் 2 பேர் கைது

தனியார் நிறுவன ஊழியரை கடத்தி ரூ.23 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனா்

Update: 2023-06-02 20:46 GMT

தனியார் நிறுவன ஊழியரை கடத்தி ரூ.23 லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரூ.23 லட்சம் கொள்ளை

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்துள்ள ஈங்கூர் பகுதியில் செயல்பட்டு வரும் இரும்பு தொழிற்சாலையில் இருந்து ஊழியர் சத்தியமூர்த்தி (வயது 47) என்பவர் அதே நிறுவனத்திற்கு சொந்தமான மற்றொரு தொழிற்சாலைக்கு கடந்த மாதம் 23-ந் தேதி காரில் ரூ.23 லட்சத்தை எடுத்துச் சென்றார்.

அப்போது சில மர்ம நபர்கள் வழிமறித்து சத்தியமூர்த்தியை காருடன் கடத்தி சென்று கட்டிப்போட்டு ரூ.23 லட்சத்தையும் கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து நிறுவனத்தின் மேலாளர் மகேந்திரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இதையடுத்து கடந்த 28-ந் தேதி இந்த கொள்ளையில் தொடர்புடைய புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கண்ணங்குடி கள்ளர் தெருவை சேர்ந்த மனோகர் (29), அதே ஊரை சேர்ந்த நவநீதன் (27) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

2 பேர் கைது

கைதான மனோகர், நவநீதன் கொடுத்த தகவலின் பேரில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய கண்ணங்குடியை சேர்ந்த இளையராஜா (31) மற்றும் கோவை செட்டிபாளையம் காந்திஜி ரோட்டை சேர்ந்த அலெக்சாண்டர் (32) ஆகிய 2 பேரை இளையராஜாவின் வீட்டில் வைத்து போலீசார் நேற்று கைது செய்தனர்.

இளையராஜா திருச்சியில் உள்ள ஒரு துணிக்கடையில் விற்பனையாளராகவும், அலெக்சாண்டர் கோவையில் சொந்தமாக லாரி புக்கிங் அலுவலகமும் நடத்தி வந்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட கண்ணங்குடியை சேர்ந்த ராஜசேகர் (31), ராமதுரை (32) ஆகியோர் இளையராஜாவுக்கும், அலெக்சாண்டருக்கும் கொள்ளை அடிக்க உதவியதில் தலா ரூ.80 ஆயிரம் கொடுத்துள்ளனர். அவர்கள் செலவு செய்தது போக இளையராஜாவிடம் இருந்து ரூ.77 ஆயிரம், அலெக்சாண்டரிடம் இருந்து ரூ.78 ஆயிரத்தையும், ஒரு மோட்டார் சைக்கிள், 2 செல்போன் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் பெருந்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இருவரையும் ஆஜர்படுத்தி அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் ரூ.23 லட்சம் பணத்துடன் தலைமறைவாக உள்ள ராஜசேகர் மற்றும் ராமதுரையை போலீசார் வலைவீசி தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்