2 குழந்தைகளுடன் பெண் கடத்தலா?
2 குழந்தைகளுடன் பெண் கடத்தலா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விராலிமலை அருகே உள்ள கல்லுப்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் ராஜா (வயது 45). இவரது மனைவி நித்யா (35). இவர்களுக்கு மதியராஜ் (8), புகழேந்தி (4) என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று நித்யா தனது மூத்த மகனான மதியராஜிற்கு திடீரென உடல் நிலை சரியில்லாமல் போனதால் சிகிச்சைக்காக விராலிமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறி விட்டு தனது இளைய மகனையும் உடன் அழைத்துக் கொண்டு சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர்கள் வீட்டிற்கு திரும்பவில்லை. இதையடுத்து ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் குழந்தைகளுடன் சென்ற நித்யாவை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர்கள் கிடைக்கவில்லை. இதுகுறித்து ராஜா விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 குழந்தைகளுடன் காணாமல் போன நித்யாவை யாரும் கடத்தி சென்றனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.