திருவட்டார் அருகே கடத்தப்பட்ட கிறிஸ்தவ போதகர் கேரளாவில் மீட்பு
திருவட்டார் அருகே கடத்தப்பட்ட கிறிஸ்தவ மத போதகரை கேரளாவில் போலீசார் மீட்டனர். இது தொடர்பாக ஆசாமியை பிடித்து போலீசார் விசாணை நடத்தி வருகிறார்கள்.
திருவட்டார்:
திருவட்டார் அருகே கடத்தப்பட்ட கிறிஸ்தவ மத போதகரை கேரளாவில் போலீசார் மீட்டனர். இது தொடர்பாக ஆசாமியை பிடித்து போலீசார் விசாணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கிறிஸ்தவ போதகர்
குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள ஆற்றூர் பள்ளிக்குழிவிளையை சேர்ந்தவர் ஜோண் குட்டி (வயது62). இவர் அந்த பகுதியில் உள்ள அசம்பிளீஸ் ஆப் காட் ஆலயத்தில் போதகராக உள்ளார். இதற்காக ஆலயத்தின் அருகே உள்ள வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் மார்த்தாண்டத்தை சேர்ந்த சிலர் இவரை பிரார்த்தனைக்கு வருமாறு அழைத்தனர். உடனே அவர் மனைவியிடம் மார்த்தாண்டம் செல்வதாக கூறிவிட்டு ஆட்டோவில் புறப்பட்டார். பின்னர் இரவு 9 மணியாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனை தொடர்பு கொண்ட போதும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். ஆனால் போதகர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
போலீசில் புகார்
இதுகுறித்து அவரது மகன் ஷெரின் ஜோண் (34) திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போதகரை தேடி வந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் ஜோண் குட்டிக்கும் இந்த பகுதியில் உள்ள சிலருக்கும் முன்விரோதம் இருந்தது தெரிய வந்தது. இதனால் இவரை யாராவது கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணையில் இறங்கினர். இதுகுறித்து மார்த்தாண்டம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதி போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
கண்காணிப்பு கேமரா காட்சி
மேலும் ஆற்றூர் முதல் மார்த்தாண்டம் வரை சாலையோர கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மார்த்தாண்டத்தில் வைத்து சில மர்ம நபர்கள் ஜோண் குட்டியை காரில் கடத்திச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
ஆனால் அவர்கள் எங்கு சென்றார்கள்? என்ற விவரம் தெரியாமல் போலீசார் குழம்பினர். பின்னர் அவரது குடும்பத்தினரிடம் விசாரித்தபோது ஜோண் குட்டியிடம் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த சிலர் பேசியதை அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கேரள போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
வீட்டில் சிறை வைப்பு
கேரள போலீசார் நடத்திய விசாரணையில் ஜோண் குட்டி கேரளாவுக்கு கடத்தப்பட்டு கோட்டயத்தில் உள்ள ஒரு வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து திருவட்டார் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் ராஜ், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் ஆகியோர் கேரளாவுக்கு சென்றனர். அங்கு நேற்று காலையில் கோட்டயத்தில் ஒரு வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த ஜோண் குட்டியை மீட்டு திருவட்டாருக்கு அழைத்து வந்தனர்.
ஆசாமியிடம் விசாரணை
இந்த கடத்தல் தொடர்பாக கோட்டயம் மன்னார்க்காட்டை சேர்ந்த 46 வயதுடைய ஒருவரை போலீசார் பிடித்தனர். அவரிடம் கடத்தலுக்கான காரணம் குறித்து இன்ஸ்பெக்டர் அப்துல்காதர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.
திருவட்டாரில் காரில் கடத்தப்பட்ட போதகர் கேரளாவில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.