அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகளை வழங்க வேண்டும்

அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகளை வழங்க வேண்டும் என திட்ட இயக்குனர் அமுதவள்ளி அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2022-06-11 16:11 GMT

மயிலாடுதுறை:-

அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகளை வழங்க வேண்டும் என திட்ட இயக்குனர் அமுதவள்ளி அறிவுறுத்தி உள்ளார்.

ஆய்வு கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு குழந்தை வளர்ச்சி திட்ட இயக்குனர் அமுதவள்ளி தலைமை தாங்கினார். கலெக்டர் லலிதா முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் இயக்குனர் பேசியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் (மே) 25-ந் தேதி 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டத்தின் கீழ் குழந்தைகளின் வளர்ச்சியை கண்டறிவதற்கான சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

மருத்துவ பரிசோதனை

அதனை தொடர்ந்து சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வருகிறது. இதன்மூலம் ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகள் கண்காணிக்கப்பட்டு அவர்களின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மேலும், சிறப்பு மருத்துவ பரிசோதனை விவரங்கள் அதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு கண்காணிக்கப்படும்.

ஊட்டச்சத்து திட்டம்

மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு தனியாக சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் உருவாக்கி செயல்படுத்தப்படும். அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகளை மையங்களில் வழங்க வேண்டும். ஆரோக்கியமான குழந்தைகள் வளர்ந்திட அனைவரும் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் திட்ட அலுவலர் ராஜம், சுகாதார பணிகள் துணை இயக்குனர் குமரகுருபரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்