கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்ய டிப்ஸ் கேட்கும் தொழிலாளர்கள் நுகர்வோர்கள் புகார்

கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்ய டிப்ஸ் தொழிலாளர்கள் கேட்பதாக நுகர்வோர்கள் புகார் தொிவித்து வருகின்றனா்.

Update: 2022-10-08 21:30 GMT


விறகு அடுப்பில் சமையல் செய்த காலம் மாறி இன்றைக்கு கியாஸ் சிலிண்டர் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை உள்ளது. ஏனெனில் ஏழை, எளிய மக்களுக்கு அரசு சார்பில் இலவச சமையல் கியாஸ் அடுப்பு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதால் சாதாரண குடிசை வீடுகளில்கூட கியாஸ் சிலிண்டர்கள் இருக்கிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 6 லட்சத்து 5 ஆயிரத்து 752 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அவர்களில் சுமார் 5 லட்சம் பேர் சமையல் கியாஸ் சிலிண்டர்களை பயன்படுத்துகிறார்கள். 50 ஆயிரத்துக்கும் மேல் வர்த்தக சிலிண்டர்களை பயன்படுத்தும் வணிகர்கள் உள்ளனர். இம்மாவட்டத்தில் பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், இந்துஸ்தான் ஆயில் ஆகிய நிறுவனங்களை சேர்ந்த சமையல் கியாஸ் வினியோகஸ்தர்கள் 35-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். ஒவ்வொரு வினியோகஸ்தரிடமும் சுமார் 15 ஆயிரம் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

டிப்ஸ் கேட்டு தொந்தரவு

இந்நிலையில் வீடுகளுக்கு சிலிண்டரை வினியோகம் செய்யும் தொழிலாளர்கள் சிலர், நுகர்வோர்களிடம் அதிக டிப்ஸ் கேட்டு தொந்தரவு செய்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து நுகர்வோர்கள் கூறிய கருத்துகள் விவரம் வருமாறு:-

விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த உஷா:-

பெட்ரோல், டீசல் விலை உயர்வு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையிலும் எதிரொலித்துள்ளது. இதனால் குடும்ப பட்ஜெட் பெரியளவில் பாதிக்கிறது. சமையல் கியாஸ் விலை உயர்வால் கூலித்தொழிலாளர்கள் உள்பட நடுத்தர மக்கள் அனைவரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

விலை உயர்வால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கியாஸ் சிலிண்டரை வாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். முதலில் சிலிண்டரை இலவசமாக வழங்கி விட்டு தற்போது அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.

கியாஸ் விலையோடு அதனை டெலிவரி செய்யும் நபருக்கும் டிப்சாக ரூ.30 முதல் ரூ.40 வரை கொடுக்க வேண்டியுள்ளது.

ஏற்கனவே சிலிண்டர் வாங்க கஷ்டப்படும் மக்களிடம் இவ்வாறு டிப்ஸ் கேட்பது மேலும் கஷ்டத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இந்த விலை உயர்வால் குடிநீர் சுட வைக்க உள்ளிட்ட சிறிய வேலைகளுக்கு மின்சார அடுப்பு பயன்படுத்துகிறேன். முடிந்தளவு கியாஸ் சிலிண்டரை சிக்கனமாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளேன்.

விழுப்புரம் கந்தசாமி லே-அவுட் பகுதியை சேர்ந்த அபிபுனிசா:-

கியாஸ் சிலிண்டருக்கான மானியம் வழங்குவதாக கூறுகின்றனர். எவ்வளவு மானியம் கிடைக்கிறது என்றே தெரியவில்லை. ஆனால் அவ்வப்போது கியாஸ் சிலிண்டரின் விலையை மட்டும் உயர்த்திக்கொண்டே செல்கிறார்கள்.

இதில் போதாக்குறைக்கு சிலிண்டரை கொண்டு வருபவர்களுக்கு டிப்சையும் கொடுக்க வேண்டியுள்ளது. இதுபற்றி அவர்களிடம் கேட்டால் வாக்குவாதம் ஏற்படுகிறது. சிலர் மிரட்டும் தொனியில் பேசி பணத்தை வசூலித்து செல்கிறார்கள். இதே நிலைமை தொடர்ந்தால் கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தாமல் அதை பரனில் தூக்கி வைத்துவிட்டு விறகு அடுப்புக்கு மாற வேண்டியதுதான்.

விழுப்புரம் அருகே காணையை சேர்ந்த சத்யா:-

கியாஸ் சிலிண்டர் விலை இனி குறையாதுபோல் தெரிகிறது. வரும் நாட்களில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். பட்ஜெட் போட்டு வாழும் நடுத்தர குடும்பத்திற்கு கியாஸ் விலை உயர்வு பெரிய சிக்கலை ஏற்படுத்தும். 3 வேளைக்கும் தனித்தனியாக சமைக்காமல் ஒரே நேரத்தில் சேர்த்து சமைத்தால்தான் கியாசை மிச்சப்படுத்த முடியும்.

இப்படியிருக்கும் பிரச்சினையில் சிலிண்டரை வினியோகம் செய்ய வருபவர்களும் டிப்ஸ் கேட்கிறார்கள். அவர்கள் டிப்ஸ் கேட்டு தொந்தரவு செய்யும் நிலையை மாற்ற வேண்டும்.

பணம் வழங்க அவசியமில்லை

தமிழ்நாடு- புதுச்சேரி மாநில நுகர்வோர் பாதுகாப்பு குழுக்களின் கூட்டமைப்பு மாநில துணைத்தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், ஏற்கனவே சமையல் கியாஸ் விலை உயர்வால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிற சூழலில் சிலிண்டர் வினியோகம் செய்யும் தொழிலாளர்கள் டிப்ஸ் கேட்பதாக நுகர்வோர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. வாடிக்கையாளர்கள் ரசீதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகையை மட்டுமே வழங்கினால் போதுமானது.

10 கி.மீ. தொலைவிற்குள் இருக்கும் வீடுகளுக்கு சிலிண்டர் கொண்டு வருபவர்களுக்கு டிப்ஸ் வழங்க தேவையில்லை. வெகு தொலைவில் இருந்து சிலிண்டர் எடுத்து வருபவர்களுக்கும், சிலரது வீடுகள் மாடிகளில் இருக்கும்போது அவ்வாறு கொண்டு வருபவர்களுக்கும் அவர்களின் கஷ்டத்தை உணர்ந்து வாடிக்கையாளர்கள் அன்பாக டிப்ஸ் கொடுத்தால் வாங்கிக்கொள்ளலாம். அதற்காக கட்டாயம் டிப்ஸ் கேட்டு தொந்தரவு ஏதும் செய்யக்கூடாது. அதேநேரத்தில் சிலிண்டர் வினியோகம் செய்யும் தொழிலாளர்களுக்கு அந்தந்த ஏஜென்சிகள் கூலியை சற்று உயர்த்தி வழங்க முன்வர வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்