வாகனம் மோதி கியாஸ் ஏஜென்சி ஊழியர் பலி
களம்பூர் அருகே வாகனம் மோதி கியாஸ் ஏஜென்சி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த களம்பூர் தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் மணி (வயது 31). இவர் களம்பூரில் உள்ள தனியார் கியாஸ் ஏஜென்சியில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி நதியா வடமாதிமங்கலம் பகுதியில் உள்ள அவரது தாயார் வீட்டுக்கு சென்றிருந்தார்.
இந்த நிலையில் மனைவியை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துக்கொண்டு இரவு 10 மணியளவில் ஆரணி - வடமாதிமங்கலம் கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தார். போளூர் நெடுஞ்சாலையில் கஸ்தம்பாடி அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் அவரது மோட்டார்சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மணி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அது குறித்து அறிந்த அவரது மனைவி நதியா மற்றும் அவரது தந்தை ஆகியோர் பதறியவாறு சம்பவ இடத்துக்கு சென்றனர்.அப்போது மணி இறந்து கிடந்தார். இது குறித்து மனைவி நதியா களம்பூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் களம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.