துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விடுவதாக பொதுமக்களை மிரட்டிய கேரள வாலிபர்கள்
கொடைக்கானலில், துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விடுவதாக பொதுமக்களை மிரட்டிய கேரள வாலிபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
கொடைக்கானல் பஸ்நிலையத்தில் நேற்று மாலை கேரள பதிவு எண் கொண்ட சொகுசு கார் ஒன்று அதிவேகத்துடனும், பலத்த சத்தத்துடனும் வந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அந்த காரை மடக்கி பிடித்தனர். அப்போது காரில் இருந்த இறங்கிய 2 வாலிபர்கள், தங்களது காரை எப்படி தடுத்து நிறுத்தலாம் என்று கூறி பொதுமக்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் காரில் துப்பாக்கி இருப்பதாகவும், அந்த துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விடுவதாகவும் மிரட்டினர். இதனால் அவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்படும் சூழல் நிலவியது.
இதனையடுத்து பொதுமக்கள், கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அவர்களை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த விஷ்ணு (வயது 30), பகது (33) என்றும், அவர்கள் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது. மேலும் காரில் இருந்து பொம்மை துப்பாக்கி ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். குடிபோதையில், அதிவேகமாக காரை ஓட்டியதாக அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். இந்த சம்பவம் கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்களிடம் ரகளை செய்த 2 பேரும், கொடைக்கானலை அடுத்த பூம்பாறை கிராமத்தில் தங்கியிருந்து விவசாயம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.