ஊட்டி விடுதியில் கேரள பெண் மர்ம சாவு

ஊட்டி விடுதியில் கேரள பெண் மர்மமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-11-16 18:45 GMT

ஊட்டி, 

ஊட்டி விடுதியில் கேரள பெண் மர்மமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுற்றுலா பயணி

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜாஸ்மின் (வயது 48). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். 2 பேரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக ஜாஸ்மின் தனது கணவரை பிரிந்து கடந்த சில ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் அவர் தனது தோழிகளான மோனி, லைலா ஆகியோருடன் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தார்.

பின்னர் ஊட்டியில் தங்கி இருந்து சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க முடிவு செய்தனர். அதன்படி ஜாஸ்மின் உள்பட 3 பேரும் ஊட்டி மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். இந்தநிலையில் நேற்று காலையில் ஜாஸ்மின் குடிப்பதற்கு சூடான தண்ணீர் வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது விடுதி நிர்வாகத்தினர் தண்ணீர் கொடுத்தனர்.

மர்ம சாவு

பின்னர் சிறிது நேரத்தில் நெஞ்சு வலிப்பதாக கூறி ஜாஸ்மின் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மோனி, லைலா ஆகியோர் ஜாஸ்மினை மீட்டு வாகனம் மூலம் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, ஏற்கனவே ஜாஸ்மின் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி மேற்கு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் பிலிப், சப்-இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தர் மற்றும் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊட்டிக்கு சுற்றுலா வந்த கேரள பெண் மர்மமாக இறந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்