தர்கா குளத்தில் மூழ்கி கேரள வாலிபர் சாவு
தர்கா குளத்தில் மூழ்கி கேரள வாலிபர் சாவு
முத்துப்பேட்டை தர்கா குளத்தில் மூழ்கி கேரளாைவ சேர்ந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
தர்காவில் பிரார்த்தனை
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடையில் பிரசித்திபெற்ற சேக்தாவூது ஆண்டவர் தர்கா உள்ளது. இதன் அருகே சிபா என்ற புனித குளம் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் இந்த குளத்தில் புனித நீராடுவது வழக்கம்.
நேற்று கேரளாவில் இருந்து இருந்து ஒரு பஸ்சில் 48 பேர் வந்து இந்த தர்காவில் பிரார்த்தனை செய்தனர். பின்னர் அருகில் உள்ள புனித குளத்தில் அவர்கள் குளித்தனர்.
குளத்தில் மூழ்கி சாவு
அப்போது கேரளா பீட் ஹவுஸ் பகுதியை சேர்ந்த முகமது ஹாஜிப் மகன் இப்ராகிம் அன்சாப்(வயது 18) என்பவர் திடீரென குளத்தில் மூழ்கினார்.
அதனை பார்த்ததும் அவருடன் வந்தவர்கள் குளத்திற்குள் அவரை தேடினர். ஆனாலும் இப்ராகிம் அன்சாப் கிடைக்கவில்லை.
உடல் மீட்பு
இதுகுறித்து முத்துப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து குளத்தில் இறங்கி தண்ணீரில் மூழ்கிய இப்ராகிம் அன்சாப் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார், இப்ராகிம் அன்சாப் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.