கேரள வருமான வரித்துறை அதிகாரிவீட்டில் 70 பவுன் நகை திருட்டு

கோவை அருகே கேரள வருமான வரித்துறை அதிகாரி வீட்டில் 70 பவுன் நகை திருட்டு போனது.

Update: 2023-04-29 18:45 GMT

வடவள்ளி

கோவை அருகே கேரள வருமான வரித்துறை அதிகாரி வீட்டில் 70 பவுன் நகை திருட்டு போனது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

வருமான வரித்துறை அதிகாரி

கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோடு சக்தி நகரை சேர்ந்தவர் கண்ணன். இவர் கேரள மாநிலம் பாலக்காட்டில் வருமான வரித்துறையின் துணை கமிஷனராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை தனது குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று காலை கண்ணன் வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக அருகில் வசிப்பவர்கள் அவருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்களை வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, கதவு உடைக்கப்பட்டு வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த துணிகள் கீழே கிடந்தன.

மர்ம நபர்கள் கைவரிசை

இதையடுத்து கண்ணன் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜபாண்டியன், வடவள்ளி இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில், வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீடு புகுந்து நகைகளை திருடி சென்றதும், போலீசாரிடம் பிடிபடாமல் இருக்க வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவி சென்றதும் தெரியவந்தது.

மேலும் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் வேறு திசை நோக்கி திருப்பி வைத்திருந்தனர்.

70 பவுன் நகை திருட்டு

தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிய மோப்பநாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

சென்னையில் இருந்து கோவை வந்த கண்ணன், வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 70 பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்