நின்ற லாரி மீது கேரள அரசு பஸ் மோதல்; 25 பேர் காயம்
புளியரையில் நின்ற லாரி மீது கேரள அரசு பஸ் மோதிய விபத்தில் 25 பேர் காயம் அடைந்தனர்.
செங்கோட்டை:
கேரள மாநிலம் கோட்டயத்தில் இருந்து தென்காசிக்கு நேற்று மதியம் கேரள அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை திருவல்லா பகுதியைச் சேர்ந்த டிரைவர் செழியன் ஓட்டினார். கோட்டயம் பகுதியைச் சேர்ந்த சிஜூ கண்டக்டராக இருந்தார்.
பத்தினம்திட்டைக்கு வந்தபோது அந்த பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் ஏறினர். இதில் தென்காசி மாவட்டம் ஊத்துமலை, கீழக்கலங்கல், பாப்பாக்குளம், சுரண்டை, மேலக்கலங்கல், பாவூர்சத்திரம், ருக்குமணியாபுரம், நடுவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சபரிமலையில் பல்வேறு பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களும் அடங்குவர். அந்த பஸ் தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உள்ள புளியரை போலீஸ் சோதனை சாவடி அருகே வந்தபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி சாலையோரத்தில் நின்ற டிப்பர் லாரி மீது மோதியது.
இதில் பஸ்சில் இருந்த 3 பெண்கள் உள்பட 25 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆட்டோக்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கோட்டை, தென்காசி அரசு ஆஸ்பத்திரிகள் உள்பட பல ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக புளியரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.