ஜவுளிக்கடை-டாக்டர் வீட்டில் திருடிய கேரள சிறுவன் கைது

சுசீந்திரம் அருகே ஜவுளிக்கடை-டாக்டர் வீட்டில் திருடிய கேரளாவை சேர்ந்த சிறுவன் கைது செய்யப்பட்டான். அவன் திருட்டுத்தனமாக ரெயில் ஏறி வந்தது அம்பலமானது.

Update: 2023-03-28 18:45 GMT

மேலகிருஷ்ணன்புதூர், 

சுசீந்திரம் அருகே ஜவுளிக்கடை-டாக்டர் வீட்டில் திருடிய கேரளாவை சேர்ந்த சிறுவன் கைது செய்யப்பட்டான். அவன் திருட்டுத்தனமாக ரெயில் ஏறி வந்தது அம்பலமானது.

ஜவுளிக்கடை-டாக்டர் வீட்டில் திருட்டு

நாகர்கோவில் அருகே உள்ள கலைநகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபு. இவர் சுசீந்திரம் பைபாஸ் ரோட்டில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த 24-ந் தேதி இரவு யாரோ ஒருவர் புகுந்து ரூ.23 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.55 ஆயிரம் மதிப்புள்ள துணிகளை திருடி சென்று விட்டார். இதுபற்றி பிரபு சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவின் காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது கடையில் திருடியவர் முக கவசம், கையுறை அணிந்து, தொப்பியுடன் திருடுவது போல் பதிவாகி இருந்தது.

இதே போல் மணக்குடி பகுதியில் முகமது அசாருதீன் என்ற டாக்டர் வீட்டிலும் திருட்டு நடந்ததும் தெரிய வந்தது. எனவே இரு திருட்டிலும் ஈடுபட்டிருப்பது ஒருவர் தான் என்பது உறுதி செய்யப்பட்டது.

17 வயது சிறுவன் கைது

அதைத்தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் கன்னியாகுமரி பகுதியில் பதுங்கி இருந்த 17 வயது சிறுவனை பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த சிறுவன் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவன் என்றும், டாக்டர் மற்றும் ஜவுளிக்கடையில் திருடியதும் தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து அந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர். அவன் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

திருட்டுத்தனமாக ரெயில் ஏறி வந்தவன்

நான் கேரளாவில் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டேன். அங்கு இருந்து வெளியே வந்ததும் திருட்டுத்தனமாக ரெயில் ஏறி ஓசூர் சென்றேன். அங்கிருந்து இரு சக்கர வாகனத்தை திருடிக்கொண்டு மதுரை வந்தேன். அங்கு எதிர்பார்த்த அளவு எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் திருடி கொண்டு வந்த இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு, வேறு ஒரு இரு சக்கர வாகனத்தை திருடிக்கொண்டு கன்னியாகுமரி வந்து சேர்ந்தேன். மதுரையில் என் மீது இரு சக்கர வாகன திருட்டு வழக்கு ஒன்றும் உள்ளது.

கன்னியாகுமரியில் சுனாமி காலனியில் ஒரு பாழடைந்த வீடு இருந்ததை பார்த்தேன். அந்த வீட்டின் மொட்டைமாடியில் இரவில் தங்குவதற்கு முடிவு செய்தேன். பகலில் இரு சக்கரவாகனத்தில் சென்று திருடுவதற்கு வசதியான வீட்டை நோட்டமிட்டேன். அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி பகுதியில் உள்ள பழைய இரும்புக்கடை ஒன்றில் ஆக்ஷாபிளேடு, சுத்தியல், கம்பி போன்றவைகளை திருடினேன். அவற்றின் உதவியுடன் டாக்டர் வீட்டில் திருடினேன்.

அதைத்தொடர்ந்து ஜவுளிக்கடையிலும் பகலில் நோட்டமிட்டுவிட்டு இரவில் சென்று திருடினேன். திருடிய பொருட்களுடன் நான் கேரளாவுக்கு புறப்பட்டு செல்ல தயாராக இருந்த போது என்னை போலீசார் கைது செய்து விட்டனர்.

இவ்வாறு வாக்குமூலத்தில் சிறுவன் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து சிறுவன் நெல்லையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான்.

Tags:    

மேலும் செய்திகள்