கெங்கையம்மன் கோவில் காவடி தீமிதி திருவிழா
குத்தாலம் அருகே கோவங்குடியில் உள்ள கெங்கையம்மன் கோவில் காவடி தீமிதி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
குத்தாலம்:
குத்தாலம் அருகே கோவங்குடியில் உள்ள கெங்கையம்மன் கோவில் காவடி தீமிதி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கெங்கையம்மன் கோவில்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மறையூர் ஊராட்சி கோவங்குடி கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் 51-ம் ஆண்டு காவடி தீமிதி சித்திரை திருவிழா கடந்த 2-ந் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து செல்லியம்மனுக்கு கும்ப பூஜை தொடர்ந்து 10 தினங்கள் கரகம், வீதி உலா உள்ளிட்டவை நடந்து முடிந்தது .
விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் காவடி தீமிதி திருவிழா நடந்தது. முன்னதாக கங்கணம் கட்டிக்கொண்டு விரதமிருந்த பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக வாண வேடிக்கைகள், மேளதாளங்கள் முழங்க சக்தி கரகம், பால்குடங்கள், காவடி சுமந்து கோவிலை வந்தடைந்தனர்.
தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன்
பின்னர் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவங்குடி கிராமமக்கள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
மேலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மஞ்சள் நீர் விளையாட்டு ஸ்ரீ அம்பாள் வீதியுலா காட்சியுடன் விழா நிறைவு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.