கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து: தமிழகத்தை சேர்ந்த 3 பேரின் உடல்கள் சென்னை வந்தடைந்தது

கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான தமிழகத்தை சேர்ந்த 3 பேரின் உடல்கள் சென்னை வந்தடைந்தது.

Update: 2022-10-20 21:12 GMT

சென்னை,

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத், மிகவும் புகழ்பெற்ற புனித தலம் ஆகும். கேதார்நாத்-குப்தகாசி இடையே ஆர்யன் ஏவியேசன் என்ற தனியார் நிறுவனம், ஹெலிகாப்டர் சேவையை இயக்கி வருகிறது.

வசதியான பக்தர்கள், அந்த ஹெலிகாப்டர் சேவையை பயன்படுத்தி கோவிலுக்கு சென்று விட்டு திரும்புவது வழக்கம். அதுபோல், கடந்த 18-ந் தேதி காலை கேதார்நாத் கோவிலில் சாமி தரிசனம் முடித்த 6 பக்தர்கள், குப்தகாசிக்கு அந்த ஹெலிகாப்டரில் புறப்பட்டனர். வழியில், ருத்ரபிரயாக் மாவட்டம் கருட் சாட்டி மலைப்பகுதியில் வந்தபோது, அந்த ஹெலிகாப்டர் திடீரென வெடித்துச் சிதறியது. காலை 11.45 மணிக்கு விபத்து நடந்தது.

இந்த கோர விபத்தில், ஹெலிகாப்டரில் இருந்த 6 பக்தர்களும், விமானியும் பலியானார்கள். மோசமான வானிலை காரணமாக, எதிர்புறத்தில் எதுவுமே தெரியாததால் இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது.

கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களில் பிரேம்குமார், கலா,சுஜாதா ஆகிய 3 பேரும் சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர்கள் என்று உத்தரகாண்ட் மாநில போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான தமிழகத்தை சேர்ந்த 3 பேரின் உடல்கள் சென்னை வந்தடைந்தது. அவர்களது உடல்களுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் அஞ்சலி செலுத்தினார். அதன் பின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்