கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை

கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை

Update: 2023-08-29 20:09 GMT

குளச்சல்:

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை பொய்த்ததால் குளங்கள், வாய்க்கால்களில் நீர் வற்றி ஓடை போல் காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். மேலும் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் கோடை வெப்பம் போல் வெயில் உள்ளது. இதனால் பொதுமக்கள் குளிர்பானங்களையே அதிகம் விரும்பி அருந்தி வருகின்றனர்.

தென் மேற்கு பருவ மழை பொய்த்ததை தொடர்ந்து வட கிழக்கு பருவ மழை கை கொடுக்குமா? என விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் குமரி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு சாரல் மழை பெய்தது. அதே சமயம் குளச்சலில் சுமார் 8 மணி முதல் பலத்த மழை கொட்டியது. இதனால் குளச்சல் மெயின் ரோட்டில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதற்கிடையே குளச்சல் கடல் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதனால் குளச்சலில் பெரும்பான்மையான கட்டுமர மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. கட்டு மரங்கள் மற்றும் பைபர் வள்ளம் ஆகியவை கடற்கரை மணற்பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. ஒரு சில கட்டுமரங்களிலேயே மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். அவற்றிலும் குறைவான மீன்களே கிடைத்தன. இதனால் நேற்று குளச்சலில் மீன் வரத்து குறைந்தது. இதுபோல் குளச்சல் சுற்று வட்டார கடற்கரை பகுதிகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமர மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்