கழிவுநீர் கால்வாய் கட்டக்கோரி சாலை மறியல்
குடியாத்தம் அருகே கழிவுநீர் கால்வாய் கட்டக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கழிவுநீர் கால்வாய்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் மோடிக்குப்பம் ஊராட்சி ஆர்.கொல்லப்பல்லி கிராமத்தில் 8-வது வார்டு முஸ்லிம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது.
ஆனால் பாதி தெருவுக்கு மட்டும் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கழிவு நீர் செல்லமுடியாமல் சாலைகளில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று கழிவுநீர் கால்வாய் கட்டித்தர வலியுறுத்தி குடியாத்தம் பலமநேர் சாலையில் ஆர்.கொல்லப்பல்லி பஸ் நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆண்டவனே, கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார் மற்றும் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இப்பிரச்சினை குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக கழிவுநீர் கால்வாய் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.