கரூர் மாவட்ட அளவிலான செஸ் போட்டி
கரூர் மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
செஸ் போட்டி
சென்னை மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதையொட்டி பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செஸ் போட்டி நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை செஸ் போட்டி நடைபெற்றது. இதில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும், 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும், அதேபோல் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும் என 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கரூர், தாந்தோன்றிமலை, கிருஷ்ணராயபுரம், கடவூர், க.பரமத்தி, அரவக்குறிச்சி, குளித்தலை, தோகைமலை உள்ளிட்ட வட்டார அளவில் போட்டிகள் நடைபெற்றன.
பரிசுகள்
வட்டார அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த 144 மாணவ, மாணவிகளுக்கு நேற்று புலியூர் கவுண்டம்பாளையம் என்.ஏ.எம். ராமசாமி செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது.இதில் 3 கட்டங்களாக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று முதல் 2 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.மேலும் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் மாமல்லபுரத்தில் நடைபெறும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பார்வையாளர்களாகவும், செஸ் வல்லுனர்களுடன் கலந்துரையாடவும் மற்றும் போட்டிகளில் பங்கேற்கவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.