கருங்குளத்தை தூர்வார வேண்டும்

திருமயத்தில் உள்ள கருங்குளத்தை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-08-21 18:05 GMT

கருங்குளம்

திருமயம் பஸ் நிலையம் செல்லும் வழியில் கருங்குளம் உள்ளது. இந்த குளம் ஊராட்சிக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. 3 ஏக்கருக்கு மேல் இருந்த இந்த குளம் தற்போது ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து குட்டையாக காட்சி அளிக்கிறது.

இந்த குளத்தில் முன்பு மழைநீர் பெய்து சுத்தமான தண்ணீராக இருந்து வந்தது. தற்போது இந்த குளத்தில் திருமயம் கடைவீதி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வரும் அனைத்து கழிவு நீர்களும் கலந்து சுகாதாரமற்ற நிலையில் கழிவுநீர் குட்டையாக காணப்படுகிறது.

கோரிக்கை

மேலும் இந்த பகுதியில் உள்ள கட்டிடங்களில் கழிவுநீர் கிணறுகள் அமைக்காமல் கழிவுநீரை நேரடியாக குழாய் மூலம் குளத்தில் விட்டு விடுகின்றனர். இதனால் மேலும் சுகாதாரமற்ற நிலை ஏற்படுகிறது. இந்த குளத்தில் கொட்டப்படும் குப்பைகளை எவ்வளவு முயற்சி எடுத்து ஊராட்சி மூலம் அள்ளி சுத்தம் செய்தாலும் பொதுமக்கள் பல்வேறு குப்பைகளை இரவு நேரங்களில் தண்ணீரில் கொண்டு போய் கொட்டி விடுகின்றனர். ஊருக்கு நடுவே மையப்பகுதியில் மிகப்பெரிய கழிவுநீர் குட்டையாக இருப்பது பொதுமக்களுக்கும், சமூக அலுவலர்களுக்கும் மிக வேதனையாக இருந்து வருகிறது. எனவே கருங்குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ஊராட்சி நிதி மூலம் இந்த குளத்திற்கு வரும் கழிவுநீர் அனைத்தையும் குளத்தில் கலக்காதவாறு மாற்று ஏற்பாடு செய்து குளத்தை தூர்வாரி மழைநீர் மட்டும் குளத்திற்கு வருவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

பொதுமக்கள் குப்பைகள் கொட்டாமல் இருக்க குளத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைப்பயிற்சி பூங்கா அமைக்க வேண்டும். அப்படி செய்தால் பொதுமக்களுக்கு சுகாதாரமாகவும், தூய்மையான பகுதியாகவும் இருக்கும். மேலும் அரசு இடம் ஆக்கிரமிப்பு செய்யாமல் பாதுகாப்பாக இருக்கும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்