நாகை புதிய பஸ் நிலையத்துக்கு கருணாநிதி பெயர் சூட்ட வேண்டும்
நாகை புதிய பஸ் நிலையத்துக்கு கருணாநிதி பெயர் சூட்ட வேண்டும்
நாகை புதிய பஸ் நிலையத்துக்கு கருணாநிதி பெயர் சூட்ட வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நகராட்சி கூட்டம்
நாகை நகராட்சி கூட்டம் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து தலைமையில் நேற்று நடைபெற்றது. நகராட்சி ஆணையர் (பொறுப்பு) விஜய் கார்த்திக், துணைத்தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர்.
இதன் விவரம் வருமாறு:-
சித்ரா(தி.மு.க.): நாகை புதிய பஸ் நிலையம் கட்டி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அதே நேரத்தில் நாகையில் கட்டப்பட உள்ள புதிய பஸ் நிலையத்துக்கு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பெயர் சூட்ட வேண்டும். இதை நகர்மன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்.
முகமதுநத்தர்(காங்): நாகை நகராட்சி பகுதியை குப்பை இல்லாத நகராட்சியாக மாற்ற ரூ.1 கோடியே 67 லட்சத்து 90 ஆயிரம் ஒதுக்கீடு செய்து 23 இலகு ரக வாகனம் வாங்க நிதி ஒதுக்கீடு செய்த முதல்-அமைச்சர், அமைச்சர் கே.என்.நேரு, தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
குழாய்கள் பதிக்க வேண்டும்
சுரேஷ்(சுயேச்சை): நாகப்பட்டினம் சுனாமி குடியிருப்பு பகுதியில் போதுமான அளவிற்கு குடிநீர் வழங்க வேண்டும்.
முகுந்தன்(தி.மு.க.): நகராட்சி பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் நேரத்தில் பாதாள சாக்கடை இணைப்பு இல்லாத இடங்களிலும் குழாய்கள் பதிக்க வேண்டும்.
மணிகண்டன்(அ.தி.மு.க.): மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி இரட்டை குவளை முறையை ஒழித்தார். ஆனால் நாகை நகராட்சியில் கூட்டம் நடக்கும் போது அதிகாரிகளுக்கு ஒரு கப்பில் டீ தரப்படுகிறது. மற்றவர்களுக்கு வேறு ஒருவிதமான கப்பில் டீ தரப்படுகிறது. இந்த இரட்டை குவளை முறையை நிறுத்த வேண்டும்.
தலைவர்: இது இரட்டை குவளை முறை என்று கூறுவது தவறு. இனிவரும் காலங்களில் அனைவருக்கும் ஒரே மாதிரியான கப்பில் டீ வினியோகம் செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.