பகவதியம்மன் ஸ்ரீபாத மண்டபத்தில் கார்த்திகை தீபம்

கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள பகவதியம்மன் ஸ்ரீபாத மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. மருந்துவாழ் மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

Update: 2022-12-06 22:04 GMT

கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள பகவதியம்மன் ஸ்ரீபாத மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. மருந்துவாழ் மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு பகவதி அம்மன் கோவில் மேல்சாந்தி தனிப்படகில் சென்று பாறையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றினார்.

அதைத்தொடர்ந்து அங்குள்ள ஸ்ரீபாத மண்டபத்தில் அமைந்துள்ள பகவதி அம்மன் பாதம் பதிந்த இடத்தில் புனித நீரால் சிறப்பு அபிஷேகம், பூஜை, தீபாராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து ஸ்ரீபாத மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் அங்கு இருந்து கோவில் மேல்சாந்தி கார்த்திகை தீபத்தை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து மண்டபத்தின் மேற்கு பக்கம் கடற்கரையில் உள்ள பகவதிஅம்மன் கோவில் கிழக்கு வாசலை நோக்கி மகா தீபம் ஏற்றினார்.

இந்த தீபம் விடிய விடிய எரிந்து கொண்டே இருக்கும். இந்த தீபத்தை கடற்கரையில் இருந்தவண்ணம் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வணங்கி வழிபட்டனர்.

சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. காலை 10 மணிக்கு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு உச்சிகால பூஜையும், உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் 12 மணிக்கு அன்னதானமும் மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் இரவு 8 மணிக்கு அம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி மேளதாளம் முழங்க வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது.

பின்னர் இரவு 9 மணிக்கு கன்னியாகுமரி சன்னதி தெருவில் பனை ஓலைகளால் வேயப்பட்ட சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 10 மணிக்கு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து வருடத்தில் 5 முறை மட்டுமே திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மருந்து வாழ் மலையில் மகா தீபம்

இதே போல் மருந்துவாழ்மலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக நேற்று பொற்றையடியில் இருந்து பக்தர்கள் எண்ணெய் குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். இந்த ஊர்வலத்தை எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு மருந்துவாழ்மலை பாதுகாப்பு இயக்க தலைவர் ஜெகன் தலைமை தாங்கினார். இதில் விஸ்வ இந்து பரிஷத் மாநில இணைச்செயலாளர் காளியப்பன், இந்து முன்னணி மாநில பேச்சாளர் எஸ்.பி.அசோகன், பஞ்சலிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சிந்து செந்தில், பொற்றையடி ஊர் தலைவர் பால்நாடார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மருந்துவாழ்மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து மலை உச்சி ஆஞ்சநேயருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டை பரம்பரை அறங்காவலரான மந்தாரம்புதூரை சேர்ந்த பெரியசாமி தேவர் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்