கார்த்திகை தீப அகல்விளக்குகள்

கார்த்திகை தீபத்திருநாளையொட்டி அகல் விளக்குகள் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-12-04 18:45 GMT

 கார்த்திகை தீபத்திருநாள், நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. 8-ந்தேதி வரை 3 நாட்கள் தமிழக இல்லங்களில் எல்லாம் தீபங்கள் ஒளிரும்.

அகல் விளக்குகள்

மண்பானைகள், கலைநயமிக்க கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் களிமண்ணில் வடிவமைக்கப்பட்ட அகல்விளக்குகள் குவிந்திருக்கின்றன. சாலை ஓரங்களிலும் அகல்விளக்கு கடைகள் முளைத்திருக்கின்றன.

விளக்குகள் 3 அங்குலம் முதல் 1 அடி உயரம் வரை விற்பனைக்கு வந்திருக்கின்றன. மண் குத்துவிளக்கு, தட்டு விளக்கு, சரவிளக்கு, 5 முக விநாயகர் விளக்கு, தேங்காய் வடிவ விளக்கு என்று ஒவ்வொரு விளக்கிற்கும் ஒவ்வொரு பெயர் சூட்டி இருக்கிறார்கள்.

ரெடிமேடு விளக்குகள்

இவை ஒருபுறம் இருக்க தற்போது மெழுகு விளக்குகள், கிளே விளக்குகள், ரெடிமேட் நெய் விளக்குகள், பீங்கான் விளக்குகள் என பல்வேறு மாடல்களில் விளக்குகள் சந்தைக்கு வந்துள்ளன.

இதனால் களிமண்ணால் செய்யப்படும் பாரம்பரிய அகல்விளக்குகள் அவைகளோடு போட்டியிட முடியாமல் மெல்ல மெல்ல அடையாளத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சமையல் பாத்திரங்கள், அலங்காரப்பொருட்களில் உலோகங்களின் ஆதிக்கம் ஏற்பட்ட பின்னர் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த தொழிலை நம்பி இருந்தவர்கள் கட்டுமானம் போன்ற இதர வேலைகளுக்குச் செல்லும் நிலைமை ஏற்பட்டது.

இதற்கிடையே திருக்கார்த்திகை தீபத்திருநாளையொட்டி தேனி மாவட்டத்தில் அகல் விளக்குகள், சுட்டி விளக்குகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர். தேனி மாவட்டம், டி.கள்ளிப்பட்டி பகுதியில் உற்பத்தி செய்யப்படும் விளக்குகளும் மாவட்டம் முழுவதும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன.

திருக்கார்த்திகை திருநாளையொட்டி விளக்குகள் விற்பனை குறித்து வியாபாரிகள் கருத்து தெரிவித்தனர்.

அதன் விவரம் வருமாறு:-

விதவிதமான விளக்குகள்

தேனி பங்களாமேட்டில் அகல் விளக்குகள் விற்பனை செய்யும் செல்வி:- கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு, ஊரடங்கு காரணமாக பண்டிகைகள் களை இழந்து காணப்பட்டன. இதனால், திருக்கார்த்திகையின் போது தீப விளக்குகள் விற்பனை மந்தமாக இருந்தன. வாங்கி வைத்த விளக்குகள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்தன. இதனால் பொருளாதார இழப்பு ஏற்பட்டது.

இந்த ஆண்டு விற்பனை நல்ல முறையில் உள்ளது. மக்கள் ஆர்வத்துடன் விளக்குகளை வாங்கிச் செல்கின்றனர். 1 ரூபாயில் இருந்து அகல் விளக்குகள் விற்பனைக்காக வைத்துள்ளோம். அதுபோல், பலவிதமான விளக்குகளும் உள்ளன. மெழுகு விளக்குகளை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். மண் விளக்குகளை மீண்டும், மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால் மக்களிடம் இன்னும் இதன் மீதான ஆர்வம் குறையவில்லை.

ஆண்டிப்பட்டியில் அகல் விளக்குகள் விற்பனை செய்யும் லாலா ராஜ்குமார்:- இந்த ஆண்டு தொடர் மழை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டு, விலை உயர்ந்துள்ளது. விலை அதிகமாக இருந்தாலும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். அகல் விளக்குகளோடு, விநாயகர் விளக்குகள், சிவன் விளக்குகள், லட்சுமி விளக்குகள், பிரதோஷ விளக்குகள் போன்றவையும் புதிய வடிவங்களோடு வந்துள்ளன. அவற்றையும் மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். வீடுகள் மட்டுமின்றி கோவில்கள் பயன்பாட்டுக்கும் விளக்குகளை வாங்கிச் செல்கின்றனர்.

வீரபாண்டியில் அகல் விளக்குகள் விற்பனை செய்யும் சுந்தர்:- வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலுக்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் அகல் விளக்குகள் வாங்கி தீபம் ஏற்றுவது வழக்கம். இருப்பினும் திருக்கார்த்திகை தீபத்திருநாளின் போது தான் விற்பனை அதிகளவில் நடக்கும். இந்த பண்டிகை மண்பாண்ட தொழிலாளர்கள், அகல் விளக்கு உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வாழ்வாதாரத்தை கொடுக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்