கார்த்திகை தீப அகல்விளக்குகள்

அகல்விளக்கு தயாரிப்பு தொழில் குறித்து திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள், பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

Update: 2022-12-04 19:00 GMT

கார்த்திகை தீபத்திருநாள், நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. 8-ந்தேதி வரை 3 நாட்கள் தமிழக இல்லங்களில் எல்லாம் தீபங்கள் ஒளிரும்.

அகல் விளக்குகள்

மண்பானைகள், கலைநயமிக்க கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் களிமண்ணில் வடிவமைக்கப்பட்ட அகல்விளக்குகள் குவிந்திருக்கின்றன. சாலை ஓரங்களிலும் அகல்விளக்கு கடைகள் முளைத்திருக்கின்றன.

விளக்குகள் 3 அங்குலம் முதல் 1 அடி உயரம் வரை விற்பனைக்கு வந்திருக்கின்றன. மண் குத்துவிளக்கு, தட்டு விளக்கு, சரவிளக்கு, 5 முக விநாயகர் விளக்கு, தேங்காய் வடிவ விளக்கு என்று ஒவ்வொரு விளக்கிற்கும் ஒவ்வொரு பெயர் சூட்டி இருக்கிறார்கள்.

ரெடிமேடு விளக்குகள்

இவை ஒருபுறம் இருக்க தற்போது மெழுகு விளக்குகள், கிளே விளக்குகள், ரெடிமேட் நெய் விளக்குகள், பீங்கான் விளக்குகள் என பல்வேறு மாடல்களில் விளக்குகள் சந்தைக்கு வந்துள்ளன.

இதனால் களிமண்ணால் செய்யப்படும் பாரம்பரிய அகல்விளக்குகள் அவைகளோடு போட்டியிட முடியாமல் மெல்ல மெல்ல அடையாளத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சமையல் பாத்திரங்கள், அலங்காரப்பொருட்களில் உலோகங்களின் ஆதிக்கம் ஏற்பட்ட பின்னர் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த தொழிலை நம்பி இருந்தவர்கள் கட்டுமானம் போன்ற இதர வேலைகளுக்குச் செல்லும் நிலைமை ஏற்பட்டது. இந்த நிலையில் புதுவரவுகளான ரெடிமேடு விளக்குகளால் அகல்விளக்கு தயாரிப்பு தொழில் அதிகளவில் பாதிப்பைச் சந்தித்து வருவதாக தொழிலாளர்களும், விற்பனையாளர்களும் வேதனையை வெளிப்படுத்துகின்றனர்.

அகல்விளக்கு தயாரிப்பு தொழில் குறித்து திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள், பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

அகல் விளக்குகளுக்கு தனி மவுசு

திண்டுக்கல்லை அடுத்த நொச்சியோடைபட்டியில் அகல்விளக்கு தயாரிப்பில் ஈடுபடும் கஜேந்திரன்:- எனது தந்தையிடம் இருந்து அகல்விளக்கு செய்யும் தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு 30 ஆண்டுகளுக்கு மேல் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். தொடக்கத்தில் கைகளால் சக்கரத்தை சுழலவிட்டு களிமண் மூலம் அகல்விளக்குகள், மண் பானைகளை செய்து வந்தோம். தற்போது நாகரிக மாற்றத்துக்கு ஏற்ப விளக்கு தயாரிப்பு தொழிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது மின்சாரத்தால் இயங்கும் சக்கரங்கள் விளக்கு தயாரிப்பு பணிக்கு பயன்படுத்தப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விளக்கு தயாரிப்பு தொழில் சரிவை சந்தித்தது. ஆனால் இந்த ஆண்டு நாங்கள் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக அகல்விளக்குகள் விற்பனை ஆகிறது. அகல் விளக்குகளிலும் தற்போது பல்வேறு வடிவங்களில் தயாரித்து விற்பனை செய்கிறோம். விநாயகர், சரஸ்வதி, அம்மன் உள்ளிட்ட தெய்வங்களுடன் கூடிய அகல்விளக்குகள், வட்ட வடிவில் 5 அடுக்கு அகல்விளக்குகள் என இன்றைய தலைமுறையினரை கவரும் வகையில் விளக்குகள் தயாரிக்கிறோம். இதற்கு மக்களிடமும் நல்ல வரவேற்பு உள்ளது. ரெடிமேடு விளக்குகள் விற்பனைக்கு வந்தாலும் இன்றும் களிமண்ணால் செய்யப்படும் அகல்விளக்குகளுக்கு தனி மவுசு உள்ளது.

மக்கள் ஆதரவு

திண்டுக்கல்லை சேர்ந்த தெய்வானை:- சிறுவயதில் இருந்தே கார்த்திகை தீப திருவிழா கொண்டாட ஆர்வமாக இருக்கும். கார்த்திகை மாதத்தில் தினமும் மாலையில் அனைத்து வீடுகளிலும் கார்த்திகை தீபம் ஏற்றுவார்கள். அப்போது எங்கள் பகுதி முழுவதும் விழா கோலம் பூண்டது போல் இருக்கும். நாங்களும் வீட்டில் மகிழ்ச்சியுடன் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபடுவோம்.

இதற்காக களிமண்ணால் செய்யப்பட்ட அகல்விளக்குகளை வாங்கி பயன்படுத்துவோம். தற்போது ரெடிமேட் விளக்குகள் ஏராளமாக விற்பனைக்கு வந்துள்ளன. ஆனாலும் களிமண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தவே பெரும்பாலானவர்கள் விரும்புகின்றனர். அதேநேரம் ரெடிமேட் விளக்குகளும் ஒரு சில மக்களின் ஆதரவை தற்போது பெற்று வருகிறது.

விற்பனை சரிவு

ஆயக்குடியை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளி பிச்சமுத்து:- ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் மெழுகினால் செய்யப்பட்ட விளக்குகள் மார்க்கெட்டுக்கு வந்ததையடுத்து அகல் விளக்கு விற்பனை சரிந்துள்ளது. எனினும் பழமையை விரும்புவோர் மண்ணால் செய்யப்பட்ட அகல்விளக்குகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 2 ஆண்டுகளாக அகல் விளக்கு விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு அகல்விளக்கு தயாரிப்பு பணி தொடங்கினோம்.

எங்களிடம் வியாபாரிகள் வந்து மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர். 1,000 விளக்குகள் ரூ.800-க்கு விற்பனை செய்கிறோம். மண்ணை தயார் செய்தல், பதத்துக்கு ஏற்றவாறு பண்படுத்துதல், விளக்கு செய்து காய வைத்தல், எரியூட்டுதல் என பல்வேறு படிநிலைகள் உள்ளன. இவ்வளவு வேலைப்பாடு இருந்தாலும் போதிய வருமானம் இல்லை. இதனால் எங்களுக்கு பிறகு எங்களது சந்ததிகள் இந்த தொழிலில் ஈடுபட விரும்பவில்லை.

ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த சேகர்:- நவீன தொழில்நுட்பத்தில் ரெடிமேட் அகல்விளக்குகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன என்றாலும் களிமண்ணால் செய்யப்பட்ட விளக்குகளில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபடுவதே சிறந்தது. நம்முன்னோர்களும் களிமண்ணால் செய்யப்பட்ட விளக்குகளில் தீபமேற்றி வழிபடவே நமக்கு கற்றுக்கொடுத்துள்ளனர். அதனை நாம் பின்பற்றினாலே வாழ்வில் நன்மை கிடைக்கும். ஆனால் இளையதலைமுறையினரில் பலர் ரெடிமேட் விளக்குகளை வாங்கி தீபமேற்றவே விரும்புகின்றனர். இதனால் மண்பாண்ட தொழிலில் ஈடுபடுபவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்