வாழைநார் தொழில் நுட்பத்தை கர்நாடக மந்திரி பார்வையிட்டார்
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வாழைநார் தொழில் நுட்பத்தை கர்நாடக மந்திரி பார்வையிட்டார்
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்துக்கு நேற்று கர்நாடக மாநில கைத்தறி, ஜவுளி மற்றும் சர்க்கரை மேம்பாட்டு வாரிய மந்திரி ஸ்ரீஷங்கர் பாட்டீல் முனேனகோப்பா வருகை தந்தார். அவர், வாழைநார் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறும்போது, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், ஆடைகள், தரைவிரிப்புகள், மெத்தைகள், கூடைகள் மற்றும் பிற பொருட்களை தயாரிப்பதற்கு வாழை நார் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என்றார். வாழை மைய இயக்குனர், உமா கூறும் போது, இந்தியாவில் வாழை பயிர் சுமார் ரூ.70 ஆயிரம் கோடி வருவாயை ஈட்டி கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது. கர்நாடகா போன்ற மாநிலங்களில் 1.4 லட்சம் எக்டரில் வாழை பரிடப்படுவதால் அதிக அளவில் கழிவுகள் உற்பத்தியாகின்றன, இதை பயன்படுத்தினால் ரூ.1000 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும். ஆட்டோ மொபைல்கள், காகித தொழிற்சாலைகளில் வாழை நாரை பயன்படுத்தலாம் என்றார். ஸ்ரீபோஜராஜ் கூறுகையில், வாழை சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு தமிழகம் மற்றும் கர்நாடகாவில் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் என்றார். இந்த நிகழ்ச்சியில் முதன்மை விஞ்ஞானிகள் சுரேஷ்குமார், சிவா, தொழில்நுட்ப அதிகாரிகள், நிர்வாக மற்றும் துணைப்பணியாளர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.