கர்நாடக சட்டமன்ற தேர்தல்: ஒரு தொகுதியில் அ.தி.மு.க. போட்டி -எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. போட்டியிடும் வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை,
கர்நாடகத்தில் மே மாதம் 10-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவதற்கு முடிவு செய்யப்பட்டது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க.வின் விருப்பம் பா.ஜ.க.வுக்கும் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் பா.ஜ.க. வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியானது. இதில் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால் பா.ஜ.க. மீது அ.தி.மு.க. அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஒரு தொகுதி
இதுதொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகளுடன், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில் கர்நாடக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவது என்று முடிவு எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வாழும் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் நேற்று அறிவிக்கப்பட்டார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'அ.தி.மு.க. ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, மே 10-ந்தேதி நடைபெறவுள்ள கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் அ.தி.மு.க. அதிகாரபூர்வ வேட்பாளராக கர்நாடக மாநில அ.தி.மு.க. அவைத்தலைவர் டி.அன்பரசன் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்', என்று குறிப்பிடப்பட்டுள்ளது.