கரிவரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்
பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் பிரமோற்சவ விழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் பிரமோற்சவ விழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.
கொடியேற்றம்
பொள்ளாச்சி கடை வீதியில் பிரசித்தி பெற்ற கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரமோற்சவ விழா கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
கடந்த 28-ந் தேதி காலை 9 மணிக்கு வெங்கடாஜலபதி அலங்காரத்திலும், மாலை 6 மணிக்கு ஆண்டாள் அலங்காரத்திலும், 29-ந்தேதி காலையில் ரெங்கநாயகி தாயார் அலங்காரத்திலும், மாலையில் ராமர் அலங்காரத்திலும் பெருமாள் திருவீதி உலா வந்தார். இதேபோன்று நேற்று முன்தினம் வரை பெருமாள் வெவ்வெறு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தேர் வடம் பிடித்தல்
இந்தநிலையில் நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. இதையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து தேரில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, ஸ்ரீதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் தேர் சத்திரம் வீதி, கடை வீதி, வெங்கட்ரமணன் வீதி, தபால் நிலைய சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை வந்தடைந்தது.
மாலை 6 மணிக்கு திருவீதி உலா நடைபெற்றது. இன்று (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு தீர்த்தவாரி, மாலை 6 மணிக்கு புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா நடைபெறுகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு விடையாற்றியுடன் விழா நிறைவுபெறுகிறது.