காரைக்கால்-திருச்சி பயணிகள் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும்

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட காரைக்கால்-திருச்சி பயணிகள் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என நாகூர், நாகை ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

Update: 2023-01-20 18:45 GMT

நாகூர்:

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட காரைக்கால்-திருச்சி பயணிகள் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என நாகூர், நாகை ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

காரைக்கால்-திருச்சி பயணிகள் ரெயில்

கொரோனா காலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பஸ், ரெயில்கள் இயக்கப்படவில்லை. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு ரெயில், பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ஒரு சில ரெயில்கள் மீண்டும் இயக்கப்படவில்லை.

காரைக்காலில் இருந்து காலை 6.30 மணிக்கு திருச்சிக்கு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. மறுமார்க்கத்தில் மாலை 4.30 மணிக்கு திருச்சியில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டது. இதனால் திருநள்ளாறு, காரைக்கால், நாகூர், நாகை மக்கள் மற்றும் யாத்திரை வரும் பயணிகள் பயன் பெற்று வந்தனர்.

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது

கொரோனா காலத்தில் இந்த பயணிகள் ரெயில் நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பல்வேறு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை காரைக்கால்-திருச்சி பயணிகள் ரெயில் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தினமும் காரைக்கால்-திருச்சி, திருச்சி-காரைக்கால் இடையே பயணிகள் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும். அல்லது அதிகாலை சென்னையில் இருந்து காரைக்கால் வரும் விரைவு ெரயிலை காரைக்கால் -திருச்சி இடையே அதிகாலை 5.15 மணிக்கு இயக்க வேண்டும்.

மீண்டும் இயக்க வேண்டும்

அதேபோல அதே ரெயிலை மதியம் 12.30 மணிக்கு திருச்சி - காரைக்கால் இடையே விரைவு ரெயிலை இயக்க வேண்டும். இந்த ரெயில் நாகூர், வெளிப்பாளையம், நாகை, கீழ்வேளூர், திருவாருர், கொரடாச்சேரி, நீடாமங்கலம், தஞ்சை, பூதலூர், திருவெறும்பூர், பொன்மலை ஆகிய ெரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்ல வேண்டும். காரைக்கால்-திருச்சி பயணிகள் ரெயிலை மீண்டும் இயக்கினால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பக்தர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என நாகூர், நாகை ெரயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர், திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்