திருப்பூர், ஆக.21-
கோவை போத்தனூர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா சாய்ஸ்ரீ தலைமையில் திருப்பூர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அண்ணாத்துரை, தர்மராஜ் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் நேற்று காலை திருப்பூர் ரெயில் நிலையத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா நோக்கி சென்ற ரெயில் காலை 8 மணிக்கு திருப்பூர் ரெயில் நிலையம் வந்து சேர்ந்தது. பொதுப்பெட்டியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த வாலிபர் வைத்திருந்த பையில் 8 கிலோ கஞ்சா இருந்தது. உடனடியாக அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் கேரள மாநிலம் திரிச்சூர் சாவக்காடு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி நித்தின் (வயது 26) என்பதும், அவர் விஜயவாடாவில் இருந்து கஞ்சாவை வாங்கி விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 8 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து நித்தினை கைது செய்தனர்.