கன்னடியன் கால்வாய் பாசன விவசாயிகள் சங்க கூட்டம்
சேரன்மாதேவியில் கன்னடியன் கால்வாய் பாசன விவசாயிகள் சங்க கூட்டம் நடந்தது.
சேரன்மாதேவி:
ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரம் விவசாயத்துக்காக பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த ஆண்டு அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததாலும், போதிய மழை இல்லாதாலும் கார் பருவ சாகுபடிக்கு அணைகளில் இருந்து ஜூலை 19-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய சூழலில் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கன்னடியன் கால்வாய் பாசன விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நேற்று சேரன்மாதேவி பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்க தலைவர் பாபநாசம் தலைமை தாங்கினார். செயலாளர் கண்ணப்ப நயினார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், கன்னடியன் கால்வாய் பாசன பகுதியில் உள்ள விளை நிலங்களுக்கு அரசாணை எண் 263-ன்படி கடந்த ஜூலை 19-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து பாசனத்துக்கு அக்டோபர் 31-ந் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் சாகுபடி பணிகளை தொடங்கி, நெல் பயிர் நடவு செய்துள்ளனர். இந்த நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் திடீரென நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால், நெற்பயிர்கள் கருகும் அபாய நிலையில் உள்ளன. அணைகளில் போதிய நீர் இருப்பு உள்ளதால் கருகும் நிலையில் இருக்கும் பயிர்களை காப்பாற்றும் வகையில் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.