மேலூர் அருகே கண்மாயில் களைகட்டிய மீன்பிடி திருவிழா -போட்டி போட்டு மீன்களை பிடித்த கிராம மக்கள்
மேலூர் அருகே மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. அப்போது கிராமங்களை சேர்ந்தவர்கள் கண்மாயில் போட்டி போட்டுக்கொண்டு மீன்களை பிடித்தனர்.
மேலூர்,
மேலூர் அருகே மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. அப்போது கிராமங்களை சேர்ந்தவர்கள் கண்மாயில் போட்டி போட்டுக்கொண்டு மீன்களை பிடித்தனர்.
மீன்பிடி திருவிழா
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பட்டூர் கிராமத்தில் ஆண்டுதோறும் நெல் விவசாய பணிகள் முடிந்தவுடன் யாரும் மீன்களை பிடிக்காமல் ஒற்றுமையாக பாதுகாத்து கண்மாயில் தண்ணீர் ஓரளவு வற்றியவுடன் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதற்காக அப்பகுதி பொதுமக்கள் நேர்த்திக்கடனாக மீன் குஞ்சுகளை வாங்கி மழைக்காலத்தில் கண்மாய் தண்ணீரில் விடுகின்றனர். அவைகள் நன்றாக வளர்ச்சி பெற்று பெரிய மீன்களாக மாறும். இந்தநிலையில். கண்மாயில் ஓரளவு தண்ணீர் வற்றியதால் மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது குறித்து பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
அதன்படி கிராம பெரியவர்கள் பாரம்பரிய முறைப்படி சாமி தரிசனம் செய்து வெள்ளை வீசி மீன்களை பிடிக்கலாம் என்று தெரிவித்தனர். அப்போது கண்மாய் கரையில் வலை, கச்சா உள்ளிட்ட மீன்பிடி வலைகளுடன் பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு உற்சாகமாக தண்ணீரில் இறங்கி மீன்களை பிடித்தனர். அப்போது கட்லா, ஜிலேபி, விரால், குரவை உள்ளிட்ட மீன்கள் சிக்கின.
நம்பிக்கை
ஒவ்வொருவருக்கும் தலா சுமார் 3 கிலோ மீன்கள் கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தங்களது வீடுகளுக்கு சென்றனர். பின் இங்கு பிடிப்பட்ட மீன்களை விற்பனை செய்யாமல் தங்களை வீடுகளில் சமைத்து இறைவனுக்கு படைத்து பின்னர் குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
இதனால் கிராமங்களில் மீன் சமையல் கம கம வாசனை பரவியது. ஆண்டுதோறும் மீன்பிடி திருவிழா நடத்துவதால் மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.