கனிமொழி எம்.பி. பிறந்த நாள் விழா
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனிமொழி எம்.பி. பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம்:
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனிமொழி எம்.பி. பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
கனிமொழி எம்.பி. பிறந்தநாள்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் காவல்காடு சொர்ணக்குமார் ஏற்பாட்டில் தி.மு.க துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி பிறந்தநாள் விழா ஸ்ரீவைகுண்டத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. ஸ்ரீவைகுண்டம் பழைய தாலுகா அலுவலகம் அருகே நடைபெற்ற இவ்விழாவிற்கு, பொதுக்குழு உறுப்பினர் காவல்காடு சொர்ணக்குமார் தலைமை வகித்து கேக் வெட்டி, மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
பிரியாணி
விழாவினை முன்னிட்டு, ஸ்ரீவைகுண்டம் சுவை ஓட்டலில் மதியம் விருந்தாக மதியம் 12 மணி முதல் மாலை 3.30 மணிவரை சிக்கன் பிரியாணி இலவசமாக வழங்கப்படுதாக அறிவிக்கப்பட்டு இருந்ததால் அங்கு ஏராளமானவர்கள் குவிந்தனர். இதனைத்தொடர்ந்து பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரம் பேருக்கு டோக்கன் வழங்கி பிரியாணி வழங்கப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் கொம்பையா மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கயத்தாறு
கயத்தாறில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நடந்த கனிமொழி எம்.பி. பிறந்தநாள் விழாவில் ஒன்றிய செயலாளர் ஆ. சின்னபாண்டியன் தலைமை வகித்து கேக் வெட்டினார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து கயத்தாறு பேரூர் கட்சி சார்பில் புதிய பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் கயத்தாறு நகர துணைச் செயலாளர் குருசாமி பாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சாலைப்புதூர் கிராமத்தில் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் தலைமையில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அங்கு மரக்கன்றுகள் நட்டனர்.பின்னர் கேக் வெட்டினர்.
சம்பகுளம்
கழுகுமலை அருகே சம்பகுளம் கிராமத்தில் தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு களப்பாளங்குளம் பஞ்சாயத்து தலைவர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். துணை தலைவர் மாரிராஜ் முன்னிலை வகித்தார். தொடர்ந்து அங்குள்ள அங்கன்வாடி மையத்திற்கு பஞ்சாயத்து தலைவர் இலவசமாக சேர்கள் வழங்கினார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் ஊர் நாட்டாமை கிருஷ்ணன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.