கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட முகாம்கள் நடைபெற உள்ள இடங்களில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆய்வு
காஞ்சீபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கலைஞர் உரிமைத் திட்ட முகாம்கள் நடைபெற உள்ள இடங்களை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆய்வு செய்தார்.
காஞ்சீபுரம் மாவட்டம், குடும்பத் தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப பதிவு தொடர்பாக மாவட்ட அளவிலான முதன்மை பயிற்சியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் 5 ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 10-07-2023-ல் பயிற்சிகள் வழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக 13-07-2023 அன்று 1,086 தன்னார்வலர்களுக்கு மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களை எவ்வாறு கைப்பேசி செயலி மூலம் பதிவேற்றம் செய்வது தொடர்பாக வட்ட அளவிலான பயிற்சி வழங்கப்பட்டது.
கலெக்டர் ஆய்வு
கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட முகாம்கள் நடைபெறவுள்ள காஞ்சீபுரம் மாநகராட்சிக்குட்பட்ட கருக்கினில் அமர்ந்தவள் கோவில் தெருவில் உள்ள நியாய விலை கடை மற்றும் கனிகண்டீஸ்வரர் தெருவில் அமைந்துள்ள குழந்தைகள் மைய கட்டிடம், காமாட்சியம்மன் கைத்தறி பட்டு கூட்டுறவு சங்கம், கைத்தறி மற்றும் துணிநூல் அலுவலகம், திரௌபதியம்மன் கோவில் வளாகம் ஆகிய இடங்களை பார்வையிட்டு, அங்கு அடிப்படை வசதிகள் உள்ளதா என கலெக்டர் ஆய்வு செய்தார்.
இதைதொடர்ந்து அடிப்படை வசதிகள் குறைவாக உள்ள இடங்களில் நடைபெறும் முகாம்களை அருகில் வேறு இடத்திற்கு மாற்றவும், அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது காஞ்சீபுரம் மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.