கனல் கண்ணன், நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசில் ஆஜராகி கையெழுத்திட்டார்

அவதூறு வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த கனல் கண்ணன் நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

Update: 2023-07-20 18:45 GMT

நாகர்கோவில்:

அவதூறு வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த கனல் கண்ணன் நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

கனல் கண்ணன்

பிரபல திரைப்பட சண்டை பயிற்சியாளரும், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கியப் பிரிவு மாநில அமைப்பாளருமான கனல் கண்ணன் மீது மதபோதகர் பற்றி அவதூறு வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டதாக நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

தி.மு.க. பிரமுகர் கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு கடந்த 10-ந் தேதி கனல் கண்ணன் ஆஜரானார். அப்போது போலீசார் அவரை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நிபந்தனை ஜாமீன்

பின்னர் இந்த வழக்கில் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தாக்கல் செய்த மனு தொடர்பாக நாகர்கோவில் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு கனல் கண்ணனிடம் 3 மணி நேரம் மட்டும் போலீஸ் காவலில் விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன்படி நேற்றுமுன்தினம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதே சமயத்தில் நாகர்கோவில் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கனல் கண்ணன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தாயுமானவர் கனல் கண்ணனுக்கு 30 நாள் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதில் தினமும் காலை மற்றும் மாலையில் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று கூறியிருந்தார்.

கையெழுத்திட்டார்

அதன்படி ஜாமீனில் வெளியே வந்த கனல் கண்ணன் நேற்று காலை நாகர்கோவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் பிரிவில் ஆஜராகி கையெழுத்திட்டார். அவருடன் பா.ஜனதா, இந்து முன்னணி நிர்வாகிகளும் வந்திருந்தனர். பின்னர் கனல் கண்ணன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இதேபோல் மாலையிலும் அவர் போலீசில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்