கனககிரி ஊராட்சி பொதுமக்கள் கடை அடைப்பு-ஆர்ப்பாட்டம்

காகாபாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் குறுகிய நடைபாதை அமைத்து தர கோரி, கனககிரி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கடையடைப்பு போராட்டமும், ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

Update: 2022-08-17 19:47 GMT

இளம்பிள்ளை:-

காகாபாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் குறுகிய நடைபாதை அமைத்து தர கோரி, கனககிரி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கடையடைப்பு போராட்டமும், ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

அடிக்கடி விபத்துகள்

மகுடஞ்சாவடி அருகே கனககிரி ஊராட்சிக்கு உட்பட்ட காகாபாளையம் பகுதியில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையின் இருபக்கம் இருந்தும் நெடுஞ்சாலையை வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் கடக்கும் போது அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன.

இந்த நிலையில் காகாபாளையம் பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த உயர்மட்ட மேம்பாலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து கனககிரி ஏரி வரை நடைபெற்று வருகிறது.

இந்தப்பணி நடைபெற்று முடிந்தால் காகாபாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து எதிரே சாலையை கடந்து செல்ல முடியாது. மேம்பாலத்தின் தரை பாதை வேம்படிதாளம் பிரிவு சாலையில் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் காகாபாளையம் பகுதியில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வேம்படிதாளம் பிரிவில் இருந்தும், ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் இருந்தும் செல்ல மிகவும் சிரமப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

குறுகிய நடைபாதை

மேலும், காகாபாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் மகுடஞ்சாவடி போலீஸ் நிலையம், ரேஷன் கடை, கனககிரி ஊராட்சி மன்ற அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், அரசு தொடக்கப்பள்ளி, பால் சொசைட்டி, தனியார் மருத்துவமனை, நூல் மில், தனியார் கல்லூரி, இடுகாடு உள்ளன. இதனால் பல்வேறு பணிகளுக்கு ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்திற்கும், வேம்படிதாளம் பிரிவு சாலையில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்திற்கும் பொதுமக்கள் சுற்றிவர வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் மீண்டும் விபத்து நடைபெற வாய்ப்புள்ளதால் காகாபாளையம் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஆட்டையாம்பட்டி பிரிவு சாலைக்கு குறுகிய நடைபாதை அமைக்க கோரி கனககிரி ஊராட்சி பொதுமக்கள் சார்பிலும் பல முறை கோரிக்கை வைத்தனர்.

கடை அடைப்பு-ஆர்ப்பாட்டம்

இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நேரில் வந்து ஆய்வு செய்து சென்றுள்ளார். இந்த நிலையில் நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்றது வருகிறது. எனவே காகாபாளையம் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஆட்டையாம்பட்டி மெயின் ரோட்டிற்கு சென்றுவர அரசு நெடுஞ்சாலை துறை குறுகிய நடைபாதை அமைத்து தர வேண்டி கனககிரி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டமும், கடை அடைப்பு போராட்டமும் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்