கம்பத்தில் இருந்து திருப்பதிக்கு அரசு பஸ் சேவை

கம்பத்தில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் அரசு பஸ் சேவையை ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

Update: 2023-08-04 21:00 GMT

கம்பத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இதில், கம்பத்தில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று நிறுத்தப்பட்டது. இதையடுத்து கம்பத்தில் இருந்து திருப்பதிக்கு மீண்டும் அரசு பஸ்சை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் இதுகுறித்து கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ.விடம் பயணிகள் கோரிக்கை விடுத்தனர். அவர், இந்த கோரிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் எடுத்துரைத்தார். அதன்பேரில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் கம்பத்தில் இருந்து திருப்பதிக்கு அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று முதல் கம்பத்தில் இருந்து திருப்பதிக்கு பஸ் சேவை தொடங்கப்பட்டது. இதற்கான தொடக்க விழா, கம்பம் புதிய பஸ் நிலையத்தில் நடைபெற்றது. அப்போது பஸ் சேவையை கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், அரசு விரைவு போக்குவரத்து கழக திருச்சி மண்டல மேலாளர் முருகேசன், திண்டுக்கல் கிளை மேலாளர் கோவிந்தராஜன், கம்பம் வடக்கு நகர தி.மு.க. செயலாளர் வீரபாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள், போக்குவரத்துக்கழக பணியாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இந்த பஸ் கம்பத்தில் இருந்து தினமும் மாலை 6 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு திருப்பதியை சென்றடையும். அதேபோல் திருப்பதியில் இருந்து தினமும் மாலை 5 மணிக்கு புறப்படும் பஸ், மறுநாள் காலை 5 மணிக்கு கம்பம் வந்து சேரும். பயண கட்டணம் ரூ.710 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்