கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் டோக்கன் முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை

கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு டோக்கன் முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Update: 2022-11-29 18:45 GMT

தேனி மாவட்டம் கேரள எல்லைப்பகுதியில் கம்பம் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு அவசர சிகிச்சை, பொது மருத்துவம், தீக்காயம், சித்த மருத்துவம், குழந்தைகள் நல பிரிவு, கண்சிகிச்சை பிரிவு, கர்ப்பிணிகளுக்கான சிகிச்சை உள்பட 35-க்கும் மேற்பட்ட மருத்துவ பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் கம்பம், காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, புதுப்பட்டி, கூடலூர் மற்றும் கேரள மாநிலம் நெடுங்கண்டம், கட்டப்பனை, வண்டன்மேடு, குமுளி, கம்பம் மெட்டு பகுதிகளை சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆஸ்பத்திரிக்கு வரும் வெளி நோயாளிகளுக்கு கணினி வழியாக பதிவு சீட்டு வழங்கப்படுகின்றன. இந்த சீட்டை பெற்றுச் செல்லும் நோயாளிகள் டாக்டரிடம் பரிசோதனை மேற்கொள்வதற்காக வரிசையில் நின்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நோயாளிகள் சிலர் வரிசையில் நிற்க முடியாமலும், நோயாளிகள் ஒருவரோடு ஒருவர் உரசி நிற்பதால் நோய் தொற்று பரவும் சூழல் ஏற்பட்டது.

இதனை தடுக்கும் பொருட்டு தற்போது டோக்கன் முறை செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் மூலம் நோயாளிகள் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. டோக்கன் எண் கூறும் போது அந்த நோயாளிகள் மட்டும் டாக்டரிடம் சென்று பரிசோதனை மேற்கொள்ளலாம். இந்த டோக்கன் முறை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்