கம்பம் உழவா் சந்தையில்வரத்து குறைவால் காய்கறிகள் விலை உயர்வு:மிளகாய் கிலோ ரூ.135-க்கு விற்பனை
கம்பம் உழவர் சந்தையில் வரத்து குறைவால் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது.
கம்பத்தில் உழவா் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு கம்பம் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா மாநிலத்தில் இருந்து பொதுமக்கள் அதிகளவில் இங்கு வந்து காய்கறி வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் வரத்து குறைவால் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, நேற்று காய்கறி விலை (கிலோவில்) பச்சை மிளகாய் ரூ.135, தக்காளி ரூ.104, கேரட் ரூ.70, முருங்கை பீன்ஸ் ரூ.96, பட்டர் பின்ஸ் ரூ.110, அவரைக்காய் ரூ.75, கத்தரிக்காய் ரூ.36, சின்ன வெங்காயம் ரூ.70, புடலங்காய் ரூ.30-க்கு விற்பனையானது.
இதில் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் விலை உயர்வு குறித்து உழவர் சந்தை அதிகாரிகள் கூறுகையில், தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து காய்கறி வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை உயர்ந்துள்ளது. மேலும் ஓரிரு வாரங்களில் காய்கறிகள் வரத்து அதிகரிக்கும்போது விலையும் குறையும் என்றனர். காய்கறி விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.