சுரண்டையில் காமராஜர் அரங்கம்; கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திறந்து வைத்தார்
நாடார் வாலிபர் சங்கம் சார்பில் சுரண்டையில் காமராஜர் அரங்கத்தை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திறந்து வைத்தார்.
சுரண்டை:
நாடார் வாலிபர் சங்கம் சார்பில் சுரண்டையில் காமராஜர் அரங்கத்தை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திறந்து வைத்தார்.
முப்பெரும் விழா
சுரண்டையில் நாடார் வாலிபர் சங்கம் சார்பில் காமராஜர் அரங்கம் திறப்பு விழா, நாடார் வாலிபர் சங்க 33-வது ஆண்டு விழா, கல்வி, விளையாட்டு, கலை ஆகியவற்றில் சிறந்து விளங்கிய மாணவ- மாணவிகளுக்கு பரிசளிப்பு என முப்பெரும் விழா நடந்தது.
சங்க கவுரவ தலைவர் எஸ்.வி.கணேசன் தலைமை தாங்கினார். சிவகுருநாதபுரம் இந்து நாடார் உறவின்முறை மகமை கமிட்டி நாட்டாண்மை தங்கையா நாடார் மற்றும் டாக்டர் செல்லையா, நாடார் வாலிபர் சங்க தலைவர் ரத்தின நாடார், கவுரவ ஆலோசகர் கே.டி.கே.காமராஜ், சாமுவேல் மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஆர்.வி.ராமர் வரவேற்றார்.
தமிழிசை சவுந்தரராஜன்
சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். பின்னர் நடந்த முப்பெரும் விழாவில் மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.
அப்போது, அவர் பேசியதாவது:-
காமராஜர் பிறந்த சமுதாயத்தில் பிறந்ததால் நான் கவர்னர் என்ற அந்தஸ்தை அடைந்துள்ளேன். வேலை மட்டும் பார்ப்பவர்களாக அல்லாமல் அனைவருக்கும் வேலை வழங்கும் சமுதாயமாக இருப்பதால் இந்திய பொருளாதார முன்னேற்றத்திற்கு இந்த சமுதாயத்தின் பங்கு இன்றியமையாதது. மேலும் உங்களுக்கு வெற்றி பெறுவதற்கான ரகசியத்தை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். அது என்னவென்றால் உழைப்பு உழைப்பு உழைப்பு.
இவ்வாறு அவர் பேசினார்.
வரவேற்பு
தொடர்ந்து சுரண்டை ஜெயேந்திரா பள்ளி மாணவ-மாணவிகள் செய்து வைத்திருந்த பனைப் பொருட்கள் கண்காட்சியை ஆர்வத்துடன் கண்டுகளித்து அங்கு வைக்கப்பட்டிருந்த நுங்கு வண்டியை உருட்டி விளையாடினார். முன்னதாக அவருக்கு ஊர் எல்கையில் சிலம்பாட்டத்தோடு வரவேற்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து சிவகுருநாதபுரம் முப்புடாதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் சிவகுருநாதபுரம் அரசு மேல்நிலை பள்ளி மாணவ-மாணவிகளின் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் பா.ஜனதா கட்சியின் மாநில துணை தலைவர் கரு நாகராஜன், பழனி நாடார் எம்.எல்.ஏ., சுரண்டை பொன்றா மருத்துவமனை டாக்டர் சி.பொன்ராஜ், தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன், இந்திய நாடார்கள் பேரமைப்பு நிறுவன தலைவர் ராகம் சவுந்தர பாண்டியன், பாட்டாளி மக்கள் கட்சி மாநில பொருளாளர் எம்.திலகபாமா, பெரிஸ் மகேந்திரவேல், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை கவுரவ தலைவர் எஸ்.வி.கணேசன் தலைமையில் நாடார் வாலிபர் சங்க தலைவர் ரத்தின நாடார், பொருளாளர் ராஜேந்திரன், செயலாளர் ராமர், துணைத்தலைவர் ஜெயக்குமார் துணைச் செயலாளர் முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.