'நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் யாருடன் கூட்டணி?' கமல்ஹாசன் பதில்
“நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி யாருடன் கூட்டணி?” என்ற கேள்விக்கு அதன் தலைவர் கமல்ஹாசன் பதில் அளித்தார்.
சென்னை,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னை அண்ணாநகரில் நேற்று நடந்தது. கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் கட்சிரீதியில் அமைந்துள்ள 117 மாவட்டங்களின் செயலாளர்களும் பங்கேற்றனர். கட்சியின் துணைத்தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, தங்கவேலு, செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய களப்பணிகள், கட்சிப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் அறிவுரைகளை வழங்கினார்.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி
குறிப்பாக நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது, 'நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும், கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் தேர்தலுக்கான வேலைகளை நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டாக வேண்டும். கிளை அளவில் கட்சியை பலப்படுத்த வேண்டும். கடந்த முறை தேர்தல்களின்போது செய்த தவறுகளை வரும் நாடாளுமன்ற தேர்தலில் செய்யக்கூடாது' என்று கமல்ஹாசன் அறிவுரைகளை வழங்கினார்.
இதுதவிர அந்தந்த மாவட்டங்களில் நடந்து வரும் உறுப்பினர் சேர்க்கை, நலத்திட்ட பணிகள் உள்ளிட்ட விவரங்களையும் மாவட்ட ரீதியாக கமல்ஹாசன் கேட்டறிந்தார்.
'விவாதித்தோம், விவரிக்க முடியாது'
இந்த கூட்டத்துக்கு பிறகு வெளியே வந்த கமல்ஹாசனிடம், "நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பேசப்பட்டதா?' என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ''நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேசினோம். விவாதித்தோம். ஆனால் அதை இப்போது விவரிக்க முடியாது. பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாகவும் விவாதித்தோம்'' என்று பதில் அளித்தார்.
2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிட்டது. 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் கண்டது. இந்த தேர்தல்களில் வெற்றி பெறாத நிலையில் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மக்கள் நீதி மய்யம் இப்போதே ஆயத்த பணிகளில் களமிறங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.