கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா
திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவெண்காடு:
திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில்
மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டை அடுத்த திருநகரியில் 108 திவ்யதேசங்களில் 37-வது தலமான அமிர்தவள்ளி தாயார் சமேத கல்யாண ரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவில் திருமங்கை ஆழ்வார்,குலசேகர ஆழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலாகும். திருமங்கை ஆழ்வார் இங்கு தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் பங்குனி பெருவிழா உற்சவம் கடந்த மாதம் 28- ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தெப்பத்திருவிழா
இவ்விழாவின் முக்கிய திருவிழாவான 12-ம் நாள் தெப்பத்திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. இக்கோவிலின் தீர்த்த குளத்தில் திருமங்கை ஆழ்வார் மற்றும் கல்யாண ரங்கநாத பெருமாள் மேளம்,தாளம் முழங்கிட பக்தர்களால் தெப்பத்திற்கு கொண்டுவரப்பட்டனர்.
தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் வாணவேடிக்கைகள் முழங்கிட தெப்பக்குளத்தை சுற்றி வளம் வந்தது. அப்பொழுது அங்கு கூடியிருந்த பக்தர்கள் நாராயணா நாராயணா என சரணகோஷமிட்டு வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன், ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன், விழா குழுவை சேர்ந்த ஆசிரியர் கீதாச்சாரி, கிராமமக்கள் செய்திருந்தனர்.