கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் வைகாசி விசாக திருவிழா
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் வைகாசி விசாக திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கழுகுமலை:
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் வைகாசி விசாக திருவிழா விமரிைசயாக நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
வைகாசி விசாக திருவிழா
கழுகுமலை கழுகாலமூர்த்தி குடவரை கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான வைகாசி விசாகத்திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 5 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. காலை 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடந்தது. காலை 7 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
பால்குட ஊர்வலம்
காலை 10 மணிக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. தொடர்ந்து நடைபெற்ற அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார். மாலை 4 மணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இரவு 8 மணிக்கு சுவாமி, வள்ளி தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் மயில் வாகனத்தில் சுவாமி, வள்ளி தெய்வானையுடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடு
வைகாசி விசாக திருவிழாவில் கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.