கல்குவாரி, கிரஷர், லாரி உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட கல்குவாரி, கிரஷர், லாரி உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் 20 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2023-07-02 18:23 GMT

காத்திருப்பு போராட்டம்

கரூர் மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகளில் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி, புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனரின் டிஜிட்டல் சர்வே நடவடிக்கையை கைவிடக்கோரி கவன ஈர்ப்பு காத்திருப்பு போராட்டம் கடந்த 10 நாட்களாக க.பரமத்தி அடுத்த புதுக்கநல்லி பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட கிரஷர், டிப்பர், லாரி, கல்குவாரி உரிமையாளர்கள், ஊழியர்கள் லாரி டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

பேட்டி

இதுகுறித்து கரூர் மாவட்ட கல்குவாரி, கிரஷர், லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குவாரிகளை நடத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

புவியியல் மற்றும் சுரங்கத் துறை சார்பில் குவாரிகளில் டிஜிட்டல் சர்வே என்ற பெயரில் நடத்தப்படும் அளவீடுகளில் முரண்பாடு உள்ளது. குவாரி உரிமையாளர்களை நேரில் வைத்துக் கொண்டு அளவீடுகள் செய்யாமல் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். இந்த போராட்டம் காரணமாக கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டு 20 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தீர்வு காண வேண்டும்

பெரு நிறுவனங்கள் பாலங்கள், சாலைகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள தேவையான மூலப்பொருட்களான ஜல்லிக்கற்கள் குவாரிகள் மூலமாக செல்வதால் அந்த வேலைகளிலும் தடை ஏற்படும்.

எனவே தமிழக அரசு எங்களது கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களை அழைத்துப் பேசி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

சட்டவிரோதமாக செயல்படும் குவாரிகளுக்கு எங்களது சங்கம் துணை நிற்காது. கரூர் மாவட்டத்தில் சமீபத்தில் விதிக்கப்பட்ட அபராதங்களில் உடன்பாடு இல்லை. ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஒரு முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தடையில்லா சான்று வாங்கி தான் தொழில் நடத்துகிறோம். ஆனால், 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த குறைகளை இப்போது கூறுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்